கனடாவில் இந்திய வம்சாவளியினருக்கு அரசியல் அங்கீகாரம் ; நவ்தீப் பெயின்ஸ் வெற்றி பயணம்

கனடாவின் ஒன்டாரியோ மாகாண லிபரல் கட்சியின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவ்தீப் பெயின்ஸ் (49) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் பதவிக்காக நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் 50.3 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த இந்தப் பிராந்தியக் கட்சிக்கும், கனடாவின் ஆளும் லிபரல் கட்சிக்கும் இடையில் நெருங்கிய அரசியல் உறவு காணப்படுகின்றது.
தனது வெற்றியைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நவ்தீப், அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்காகக் கட்சியை வலுப்படுத்துவதும், வெற்றிக்குத் தயார்படுத்துவதுமே தனது முதன்மையான பணியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதரவாளரான நவ்தீப், ஏற்கெனவே கனடாவின் மத்திய அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்னர் ஒன்டாரியோ லிபரல் கட்சியின் தலைவராகப் பதவி வகித்த போனி கிரோம்பி, கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
ஒன்டாரியோ மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இதுவரை மூன்று தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால், எதிர்வரும் 2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாகாணத் தேர்தல் நவ்தீப்புக்கும் அவரது கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் நவ்தீப், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் மூத்த நிதி ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமமொன்றில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நவ்தீப். அவரது பெற்றோர் தொழிலாளர்களாக இருந்த நிலையில், அவர் குழந்தையாக இருந்தபோதே குடும்பத்துடன் கனடாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவ்தீப் கனடாவின் முக்கிய மாகாணக் கட்சியொன்றின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
![]()