இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலங்கள் குறித்து ஜனாதிபதியை சந்திக்க சர்வஜன நீதி அமைப்பு கோரிக்கை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பன பற்றிய கரிசனைகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றுக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு சர்வஜன நீதி அமைப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அடங்கிய சர்வஜன நீதி அமைப்பினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

எமது அமைப்பினால் நவம்பர் 9 ஆம் திகதியிடப்பட்டு உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பன தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றது. தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம் என்பன குறித்து இந்தக் கடிதத்தை எழுதுவதென அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த இரண்டு சட்டமூலங்களும் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சரத்துக்களைக் கொண்டிருப்பதனால், அவற்றை உடனடியாக மீளப்பெறுமாறு உங்களை வலியுறுத்தும் அதேவேளை, இதுபற்றி மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாக அண்மையில் நீங்கள் வெளியிட்ட அறிவிப்பையும் வரவேற்கின்றோம்.

மிகமோசமான சட்டமாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத்டைச்சட்டத்தை நீக்குமாறு நாம் பல ஆண்டுகளாகக் கோரிவருகின்றோம். அவ்வாறிருக்கையில் தற்போது புதிதாக முன்மொழியப்பட்டுள்ள இரண்டு சட்டமூலங்களும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்வதற்கு ஏதுவான மிகக்கடுமையான சரத்துக்களைக் கொண்டிருக்கின்றன. ஜனநாயக நாடொன்றில் அதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப்படக்கூடாது.

அதேவேளை சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் கலந்தாலோசனைக்கு நீங்கள் விடுத்திருக்கும் அழைப்பை நாம் வரவேற்பதுடன், இவ்விடயத்தில் வெளிப்படையானதும் செயற்திறன்மிக்கதுமான கலந்துரையாடலை எதிர்பார்க்கின்றோம். எனவே மேற்படி இரண்டு சட்டமூலங்கள் பற்றிய எமது கரிசனைகளை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக உங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *