இலங்கை

செம்மணி எலும்புக்கூடுகளுக்கு சர்வதேச ரீதியில் டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும்

மருத்துவ நிபுணத்துவமிக்க ஒருவரால் மாத்திரமே தொல்லியல் சார் தடயவியல் ஆய்வை மேற்கொள்ள முடியும். செம்மணி புதைகுழி தொடர்பில் தடயவியல் அறிக்கையை சமர்ப்பித்துள்ள ராஜ்சோமதேவ என்பவர் எவ்வித மருத்துவ தடயவியல் கல்வித் தகுதியும் இல்லாத சாதாரண தொல்லியலாளர். அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஏன் மரபணுப் (டி.என்.ஏ) பரிசோதனைகளை முன்னெடுக்க கூடாததென யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? இவற்றில் சில எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மேலும் சில எலும்புக்கூடுகள் முழுவதுமாக தோண்டியெழுக்கப்பட்டுள்ளன இவை தொடர்பான விபரங்களை வழங்க முடியுமா? இதுவரையில் அங்கு முறையான அகழ்வாராய்ச்சிகள் தரப்படுத்தல்கள் மற்றும் அவை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுதல் போன்றன நியாயமான முறையில் இடம்பெற்றுள்ளனவா?

குறித்த அகழ்வாராய்ச்சிகள் மூன்று கட்டங்களாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சேகரிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அல்லது எலும்புகள் மற்றும் அங்குள்ள சான்றுப் பொருட்கள் சரியான முறையில் அடையாளப்படுத்தப்பட்டு, பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றனவா? அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் சோமதேவ, இந்த அகழ்வாராய்ச்சி தொடர்பில் ஏதேனும் அறிக்கையிடலை மேற்கொண்டுள்ளரா? அதில் செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்ட மக்கள் கொடிய தொற்று நோயினால் உயிரிழந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளடக்கப்பட்டிருந்தது. இதுவரையில் தோண்டியெடுக்கப்பட்ட சடலங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட மருத்துவம் சார்ந்த மருத்துவ அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான தொழில்சார் தகுதி தொல்லியலாளர் சோமதேவவுக்கு உள்ளதா? அவ்வாறு இருப்பின் அவை யாவை?

ராஜ்சோமதேவவை பொறுத்தவரையில் அவருக்கு மூன்று பட்டங்கள் உள்ளன. களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும், சுவீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். தொல்லியல் சார்ந்த தடயவியல் ஆய்வை மருத்துவ அறிவுள்ள ஒருவரால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இதனுடன் தொடர்புடைய ராஜ்சோமதேவ எவ்வித மருத்துவ தடயவியல் கல்வித் தகுதியும் இல்லாத சாதாரணமான பொது தொல்லியலை மட்டும் கற்றவராக இருக்கின்றார்.

மேலும் கண்டறிக
செய்திகள் வாசி
விசேட கட்டுரைகள்
நாளிதழ் சந்தா
சாதாரணமாக குற்றவியல் இடம்பெற்ற இடத்தை நாங்கள் பார்ப்பதாக இருந்தால் அங்கு குற்றவியல் தொடர்பான அறிக்கையை செய்வதற்கு மருத்துவ தடயவியல் தொடர்பான அறிவு இருக்க வேண்டும். எந்தவொரு அறிவும் இல்லாத ஒருவரை திட்டமிட்ட ரீதியில் அரசாங்கமானது ஜனாதிபதி படித்த களனி பல்கலைக்கழகத்தில் படித்த அவரின் நீண்டகால நண்பரை இந்த தொல்லியல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

அந்த அறிக்கையிடலுக்குள் தமிழ் மக்களுக்கு எதிரான சில விடயங்கள் அடங்கியுள்ளதாக பொதுவாக சர்வதேச ரீதியிலும் தமிழ் சமூகத்திலும் கருத்து நிலவுகின்றது.

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முறையான விசாரணை நடத்தப்படுகின்றதா? இதுவரையில் செம்மணி புதைகுழி தொடர்பில் அங்கு நடந்த குற்றங்கள் தொடர்பாக பொலிஸாரோ அல்லது நீதி அமைச்சினாலோ முறையான விசாரணைகள் அல்லது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா? கண்டெடுக்கப்பட்டுள்ள எச்சங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்த அரசாங்கம் ஆரம்பிக்குமா? இல்லையேல் அதற்கான காரணங்கள் யாவை?

சர்வதேச விசாரணையென கேட்கின்ற போது இலங்கையில் ஒற்றைத்தர மரபணு பரிசோதனை( ( டி.என்.எ) இரட்டைத் தர மரபணு போன்றவற்றை பிரித்தெடுத்து அவற்றை ஆய்வு செய்வதற்கான எந்த வசதிகளும் இல்லை. எடுக்கப்பட்ட உடலங்களில் உள்ள ஆதாரங்களை டீஎன்ஏ தரப்படுத்தலுக்காக வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெற்றுக்கொண்டு அதனை செய்ய முடியுமா? ராஜ்சோமதேவ அகழ்ந்தவற்றில் மாத்தளை, மன்னார் மற்றும் செம்மணி ஆகியன புதைகுழிகள் உள்ளன.

இந்த மூன்றும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள புதைகுழிகளாகும். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களை போக்குவதற்காக ஏன் காணாமல் போனவர்களின் ஒவ்வொரு உறவினர்களின் மரபுணுக்களை பெற்று கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளின் மரபணுக்களை பிரித்தெடுத்து அதனை நடுநிலையான சர்வதேச அமைப்பொன்றிடம் ஏன் கொடுக்க முடியாது என்று கேட்கின்றேன்.

ஒரு இனம் தங்களுக்கு அநியாயம் நடந்துள்ளதாக போராடுகின்றது. இவ்வாறான நிலைமையில் டி.என்.ஏ பிரித்தெடுப்பு தொடர்பான சகல விடயங்களையும் ஏன் சர்வதேசத்திற்கு முன்னால் நடத்துவதற்கு பயப்படுகின்றீர்கள். ஏன் சர்வதேச கண்காணிப்பு பொறிமுறைக்கு முன்னால் என்ன நடந்தது என்பதனை அறிந்து அதனை வெளியிடுவதற்கு அரசாங்கம் ஏன் அச்சமடைகிறது. அது பெரிய கவலையாக உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *