பலதும் பத்தும்

சாலைகளை ஆக்கிரமித்து படையெடுக்கும் சிவப்பு நண்டுகள்

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவில், திடீரெனக் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும் சிவப்பு நண்டுகளால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. வனப்பகுதியில் இருந்து பல லட்சம் சிவப்பு நண்டுகள் ஒரே நேரத்தில் கடலை நோக்கிப் பயணிக்கும் காணொளிகள் இணையதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அதன் பின்னணி குறித்த சுவாரசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல்வேறு காணொளிகள் பரவி வருகின்றன. அவற்றில் சில காணொளிகள் இணையவாசிகளின் (நெட்டிசன்கள்) கவனத்தை ஈர்ப்பதோடு, அதன் பின்னணி குறித்துத் தேடவும் வைக்கின்றன. அவ்வாறுதான், தற்போது வைரலாகியுள்ள ஒரு காணொளி குறித்து இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்தக் காணொளியில், கூட்டம் கூட்டமாக வீதிகளில் சிவப்பு நண்டுகள் ஊர்ந்து செல்வது பதிவாகியுள்ளது. மாபெரும் போர்க்களத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் படையெடுத்து முன்னேறிச் செல்வது போல், வீதிகளே தெரியாத அளவிற்குச் சிவப்பு நிற நண்டுகள் சாரை சாரையாகச் செல்கின்றன. வனப்பகுதிக்கு நடுவே செல்லும் வீதிகளில் மனிதர்களோ, வாகனங்களோ இல்லாத சூழலில், இந்தச் சிவப்பு நண்டுக் கூட்டம் மட்டுமே ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு நகர்ந்து செல்கிறது.

“நூறா? ஆயிரமா?” என்றால், இல்லை! ஒரே நேரத்தில் பல லட்சம் நண்டுகள் வீதிகளில் படையெடுக்கின்றன. இதுவே இணையவாசிகளைப் பதற்றமடைய வைத்துள்ளது.

“என்ன நடக்கிறது இங்கே? எங்கிருந்து இவ்வளவு சிவப்பு நண்டுகள் வந்துள்ளன? ஏதாவது இயற்கை பேரிடருக்கான அறிகுறியா?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருவதோடு, அதன் பின்னணியைத் தேடத் தொடங்கியுள்ளனர். ஆனால், உண்மையில் இது இயற்கையாகவே நிகழும் ஒரு அற்புதச் செயற்பாடாகும். இதனால் எவரும் பீதியடையத் தேவையில்லை.

இந்தச் சிவப்பு நண்டுப் படை எங்கே செல்கிறது? எதற்காக இவ்வாறு வீதிகளை ஆக்கிரமித்துள்ளது? அதன் பின்னணியில் உள்ள சுவாரசியத் தகவல்களை இங்குப் பார்க்கலாம்:

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவானது, சுமத்ரா தீவுக்குத் தெற்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான இத்தீவு, தனித்த அடையாளத்துடன் விளங்குகிறது. கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள தேசியப் பூங்காவில் அதிகளவிலான சிவப்பு நண்டுகள் (Red Crabs) வாழ்கின்றன. இவற்றைப் பார்வையிடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்காலம் ஆரம்பமாகும்போது, இந்தச் சிவப்பு நண்டுகளின் இனப்பெருக்கக் காலமும் தொடங்கும். அந்த வகையில், தற்போது இனப்பெருக்கக் காலம் ஆரம்பமாகியுள்ளமையால், முட்டையிடுவதற்காக வனப்பகுதியிலிருந்து கடற்கரையை நோக்கி இவை இவ்வாறு கூட்டமாக இடம்பெயர்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *