கட்டுரைகள்

விஜய்யினுடைய ஆட்சி ஏற்படுத்துகின்ற உணர்வு என்ன?…  நியூசிலாந்து சிற்சபேசன் 

நியூசிலாந்து சிற்சபேசன்

தமிழக அரசியல் வரலாற்றிலே, “வானத்தை வில்லாக வளைப்பதற்கு” ஒப்பான மாற்றத்தை விஜய் ஏற்படுத்தினார்.

எந்தவொரு சித்தாந்த பின்புலமுமற்ற, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்றத் தேர்தலிலே தமிழக ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

1967ம் ஆண்டிற்குப் பின்னரான காலகட்டத்திலே, திராவிடக் கட்சிகளே தமிழகத்தை ஆட்சிசெய்தன. அதற்கு முன்னரான காலகட்டத்தை, காங்கிரஸ் சித்தாந்தம் சார்ந்த கட்சிகளின் ஆட்சிக்காலம் என்று சொல்லலாம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாநிலக் கட்சிகள் மட்டுமன்றி, தேசியக் கட்சிகளுமேகூட வெவ்வேறு மாநிலங்களிலேயும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுகின்றன. அஃது, தமிழகத்தில் சாத்தியப்படவில்லை. கடந்த அரைநூற்றாண்டாக, திராவிடக் கட்சிகளே தமிழகத்திலே கோலோச்சின.

திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்வது மட்டுமே, தேசியக் கட்சிகளுக்கு ஒரே தெரிவாகியது. மகராஷ்டிரா – டெல்லி – மேற்கு வங்கம் என வெற்றி மீது வெற்றிகளைக் குவித்த சாட்சாத் மோடி – அமித்ஷாவின் தந்திரங்களுமேகூட தமிழகத்தில் எடுபடவில்லை. அவையெல்லாம், “உச்சி வெய்யிலிலே வெண்ணெய் விற்கப் புறப்பட்ட” கதையாகின.

அத்தகையதொரு சூழலிலே, கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலேயே, தமிழகத்தின் ஆட்சியதிகாரம் விஜய்க்கு வசப்பட்டது.

தேர்தலுக்கே முன்னரேயே, கரூர் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் விஜய் தொடர்பில் அவநம்பிக்கைகளை ஏற்படுத்தியிருந்தன.

C. Joseph Vijay Sworn In as Tamil Nadu Chief Minister, Marking Historic  Political Shift, News, Tabla

அதுமட்டுமல்லாமல், விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை. வேட்பாளர் அறிமுகம், தேர்தல் அறிக்கை போன்றவற்றுக்கேனும் நட்சத்திர ஓட்டல்களுக்கு வெளியே வரவில்லை.

பிரசாரக்கூட்டங்களிலே அதிகமாகப் பேசவில்லை. பேசினாலும், மிகச்சொற்ப நேரமே பேசினார். அதிலேயும், ‘அங்கிள் ஸ்டாலின்”, ‘திமுக என்பது தீய சக்தி’ போன்ற “பஞ்ச் டயலாக்”களே அதிகம் பேசினார்.

ஒரேவகையான சொற்களையே திரும்பத்திரும்பப் பயன்படுத்தினார். அதனால், யாரோ எழுதிக் கொடுப்பதை ஒப்பிக்கின்றார் என்னும் அபிப்பிராயத்தையே ஏற்படுத்தினார்.

ஆனாலும்கூட, “தலை” காட்டாமலேயே, “தலைவர்” ஆகிவிட்ட விஜய்யினால் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றமுடிந்தது.

விஜய் ஆட்சிப் பொறுப்பேற்று ஆறுமாதங்கள் கடந்திருக்கின்றன. ஐந்தாண்டு பதவிக்காலத்தில், ஆறுமாதம் என்பது மிகக்குறைந்த காலப்பகுதியாகும். இருந்தாலும்கூட, ஆட்சியின் செல்நெறி குறித்த பார்வை குறுகியகாலத்திலேயே கிடைக்கின்றது.

சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுள்ளன. வேறுசில பகுதிபகுதியாக நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன.

பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துத் திட்டம், காலை உணவுத் திட்ட விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், திருமண உதவித் திட்டம், ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் போன்றவை விஜய் ஆட்சி தொடர்பான அபிமானத்தை சாமானியர்களிடையே அதிகரித்துள்ளதாகவே தெரிகிறது.

அரசு சேவைகளை ஆன்லைன் மூலம் விரைவாக வழங்குதல், சொத்துப் பதிவு முறையில் மாற்றங்கள், டாஸ்மாக் கடைகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை போன்றவை கண்கண்ட சாட்சியாகின்றன. கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த மதுபானக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

அதேவேளையில், கடந்த ஆறுமாதகாலத்தில் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ச்சியான சரிவைக் காணமுடிகின்றது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் அண்டைய மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் (ஆந்திரா 24%, கேரளா 23%, கர்நாடகா 18%, தெலங்கானா 14%) வளர்ச்சியடைந்தன. ஆனால், தமிழகம் 3% வளர்ச்சியோடு திணறுகின்ற சூழலையே காணமுடிகின்றது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் விஜய் அரசு காத்திரமாகச் செயலாற்றவில்லை. அண்டை மாநிலங்களிலே ஏற்படுகின்ற அபரிமிதமான வளர்ச்சியே அதற்கும் சாட்சியாகின்றது.

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தீர்வு ஏற்படவில்லை. அதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்கின்றது. அதேபோன்று, தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டங்களையும் கவனிக்க முடிகின்றது. அந்தவகையிலே, வெவ்வேறு தரப்பினரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முடிவின்றித் தொடர்கின்றன.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசு நியமனங்கள், குதிரைப் பேரக் குற்றச்சாட்டு, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் மற்றும் பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் என சார்ச்சைகளின் பட்டியல் நீள்கின்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரம் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது. “ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்” என்னும் சொல்லாடலை நினைவுக்கு கொண்டுவருகின்றது.

சிங்கப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியிலே, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய பொறுப்பில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்னும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

விஜய் தரப்பு, எளிமையான பின்னணி கொண்டவர்களை ஆட்சியதிகாரப் படிக்கட்டுகளிலே ஏற்றிவிட்டமை கவனிப்பைப்பெற்றதாகும்.

Tamil Nadu to get a Christian Chief Minister as Joseph Vijay set to be  sworn in

ஆனால், அவர்கள் உண்மையிலேயே எளிமையானவர்களா அல்லது அவ்வாறான “பிம்பம்” தந்திரமாகக் கட்டமைக்கப்பட்டதா என்னும் கேள்வியே மிஞ்சுகிறது.

தமிழை வாசிக்கத் திணறுகின்றனர். “மனமார்ந்த நன்றி” என்பதை “மன்மத நன்றி” என்கின்றனர். தொளாயிரத்துக்கும் ஒன்பதாயிரத்துக்கும் வேறுபாடு காணத் தடுமாறுகின்றனர். அடாவடியாகப் பேசுகின்றனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, விஜய் தரப்பினருடைய செயற்பாடு நம்பிக்கைகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, தேர்தலுக்கு முன்னர் சொல்லப்பட்ட “தற்குறி” என்னும் சொல்லாடலையே நினைவுபடுத்துகின்றது.

விஜய்யின் பிம்பத்தையும், “விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான” கதையாடலையும் உருவாக்குவதிலேயே மிதமிஞ்சிய கவனத்தைக் கவனிக்க முடிகின்றது.

சுருங்கச்சொன்னால், பிரமாண்டமான சினிமா “சூட்டிங்” நடைபெறுவதான உணர்வையே விஜய்யினுடைய ஆட்சி ஏற்படுத்துகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *