தினமும் 12 டீஸ்பூன் பெட்ரோலை தினசரி பானமாக அருந்தும் விசித்திரப் பெண்

வாகனங்களின் இயந்திரங்களுக்கு உயிரூட்டும் எரிபொருளான பெட்ரோலை, இளம்பெண் ஒருவர் தனது தினசரி பானமாக அருந்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உயிருக்கு உலை வைக்கும் இந்த விபரீதப் பழக்கத்திற்கு அடிமையான யுவதியொருவரின் கதை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற 20 வயது இளம்பெண்ணே, தினமும் பெட்ரோல் குடிக்கும் தனது விசித்திரமான பழக்கத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்ஷன்’ (My Strange Addiction) நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தான் நாளாந்தம் சுமார் 12 தேக்கரண்டி அளவிற்குப் பெட்ரோல் குடிப்பதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
கலனிலிருந்து நேரடியாகப் பெட்ரோலைக் குடிப்பதையும், அதன் மூடியில் ஒட்டியிருக்கும் துளிகளை நக்கிச் சுவைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்த அவர், “ஆரம்பத்தில் காரமாகவும், பின்னர் தொண்டை எரிவது போலவும் உணர்வு ஏற்படும்; இருப்பினும் அந்தச் சுவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிலளித்திருந்தார்.
இவரது குடும்பத்தினர் இந்த விபரீதப் பழக்கத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சித்தும், “நீ அருந்தும் அடுத்த சொட்டுப் பெட்ரோலே உனது உயிருக்குக் கடைசியாக அமையலாம்” என மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்தும் அவர் அதனைக் கைவிட மறுத்துவிட்டார்.
மிகக் குறைந்த அளவிலான பெட்ரோல் நுரையீரலுக்குள் சென்றால் கூட, அது கடுமையான நிமோனியா பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பானதன் பின்னர் ஷானன் எங்கு சென்றார், தற்போது எவ்வாறான நிலையில் இருக்கிறார் என்பது குறித்த எவ்விதத் தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![]()