பலதும் பத்தும்

சட்டச் சிக்கலில் காகப் பாட்டிகள்

வானில் பறக்கும் காகங்களைக் காப்பாற்ற முனைந்த இரண்டு மூதாட்டிகள், தற்போது நீதிமன்றக் கூண்டில் ஏறியுள்ளனர். விலங்குகளைக் காப்பாற்றும் நல்லெண்ணமோ அல்லது காகங்கள் மீது கொண்ட பாசமோ அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்கவைத்துள்ளது.

தேசியப் பூங்காக் கழகத்தினால் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக நகரின் பல பகுதிகளில் பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செஞ்சா ரோடு (Senja Road) 629ஆம் இலக்கக் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் காகங்களைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியின் வலையை 60 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டி, உள்ளே சிக்கியிருந்த காகங்களைத் தப்பச் செய்துள்ளார்.

இதேபோல், யீஷுன் ஸ்ட்ரீட் 11 (Yishun Street 11) 161ஆம் இலக்கக் குடியிருப்புப் பகுதி அருகே வைக்கப்பட்டிருந்த மற்றொரு பொறியை, 74 வயதுடைய மற்றொரு பெண் அட்டைப் பெட்டியைக் கொண்டு மூன்று முறை மூடிச் சேதப்படுத்தியுள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

சம்பவ இடங்களிலிருந்த கண்காணிப்புக் கேமராப் பதிவுகளின் உதவியுடன் இருவரைக் கண்டறிந்த காவல்துறையினர், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். முக்கியச் சேவைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றங்களின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *