உலகம்

மரணப் போராட்டத்தில் இருந்து மீண்ட ஆஸ்திரேலிய பெண் எம்.பி.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தனது தேர்தல் தொகுதி அலுவலகத்திற்கு வெளியே இடம்பெற்றதாகக் கூறப்படும் திட்டமிட்ட வாகனத் தாக்குதலில் இரு கால்களையும் இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ், வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டு மறுவாழ்வு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

65 வயதான ஹெலன் ஹெய்ன்ஸ், கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி வங்கராட்டா (Wangaratta) பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு வெளியே டொயோட்டா லேண்ட்குரூசர் வாகனத்தால் மோதப்பட்டார்.

இச்சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், பலத்த காயமடைந்த அவர் மெல்பேர்னிலுள்ள அல்பிரட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

தனது உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக முதன்முறையாக அறிக்கையொன்றை வெளியிட்ட ஹெலன் ஹெய்ன்ஸ், தற்போது குணமடைதலின் மறுவாழ்வுக் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனது குணமடைதல் பயணத்தில் மறுவாழ்வுக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இது மிகவும் சாதகமான தருணமாகும். அல்பிரட் வைத்தியசாலையில் எனக்குக் கிடைத்த நிபுணத்துவம் மிக்க, அக்கறையான மருத்துவப் பராமரிப்புக்காக நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கின்றேன். அடுத்த கட்ட சிகிச்சைகளிலும் இதேபோன்ற பராமரிப்பு கிடைத்து வருகின்றது.

சேவ் த சில்ட்ரன் (Save the Children) அமைப்புக்கு அவுஸ்திரேலிய மக்கள் வழங்கியுள்ள நன்கொடைகள் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. இந்த நிதியைப் பயன்படுத்தி சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணிகளில் உரிய நேரத்தில் அந்த அமைப்புடன் இணைந்து செயற்பட ஆவலாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

1.46 மில்லியன் டொலருக்கும் அதிகமான நன்கொடை
தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஹெலன் ஹெய்ன்ஸின் தேர்தல் தொகுதி அலுவலகத்திற்கு முன்பாகப் பெருமளவிலான மலர்க்கொத்துகளும் வாழ்த்துச் செய்தி அட்டைகளும் வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, மலர்களுக்குப் பதிலாக ஹெலன் ஹெய்ன்ஸ் விரும்பும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான சேவ் த சில்ட்ரன் அமைப்புக்கு நன்கொடை வழங்குமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதிலிருந்து குறித்த அமைப்புக்கு 1.46 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிகமான நிதி நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

நீண்டகால மறுவாழ்வு சிகிச்சை

ஹெலன் ஹெய்ன்ஸின் உடல்நிலை கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி வரை ஆபத்தான நிலையில் இருந்ததுடன், அதன் பின்னர் சிகிச்சைக் குழுவினரால் ‘தீவிரமானது, ஆனால் நிலையானது’ என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 6ஆம் திகதி அவரது உடல்நிலை மேலும் முன்னேற்றமடைந்து சீரான நிலையை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தாக்குதல் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பின்னர், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சாம் மோஸ்டின், ஹெலன் ஹெய்ன்ஸின் கணவர் பில் ஹெய்ன்ஸுடன் இணைந்து அல்பிரட் வைத்தியசாலைக்கு வெளியே ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது, தனது மனைவியின் குணமடைதல் பயணம் நீண்டதும் கடினமானதுமாக இருக்கும் என பில் ஹெய்ன்ஸ் தெரிவித்திருந்தார்.

எனினும், அவர் மன உறுதி மிக்கவர் என்றும், குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஆதரவுடன் மீண்டு வருவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் விசேட அமர்வொன்று நடத்தப்பட்டதுடன், பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹெலன் ஹெய்ன்ஸுக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது மறுவாழ்வு சிகிச்சைப் பயணம் தொடரும் நிலையில், அவுஸ்திரேலிய மக்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடன் இருப்பதாகப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் டர்ராவிங்கி (Tarrawingee) பகுதியைச் சேர்ந்த 43 வயதான பிரெண்டன் நியூஜென்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை, வேண்டுமென்றே கடுமையான காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் பொதுநலவாய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவருக்குத் தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சுருக்கமாக ஆஜர்படுத்தப்பட்ட அவர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு சில மனநலப் பிரச்சினைகளும் அரிதான நரம்பியல் பாதிப்பொன்றும் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *