ஜனாதிபதியின் காலை வார இடமளிக்கப்படாது; ராஜாங்கனை சத்தாரதன தேரர் கூறுகிறார்

ஜனாதிபதி தனது வேலைகளை செய்ய விடாமல் எவராவது அவரின் காலை வாரிவிட முயன்றால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்று ராஜாங்கனை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸப தேரர் தரப்பினருக்கும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் குழுவினருக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல் நிலைமை தொடர்ந்து சத்தாரதன தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் தலையில் கட்டுப் போடப்பட்ட நிலையில் தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக வெளியிட்டுள்ள வீடியோவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சத்தாரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதிக்கு வேலைகளை செய்வதற்கு இடமளிக்காமல் பேரணிகளை நடத்தினர். விஹாரமாதேவி பூங்காவில் கூத்துக்கள் நடத்தினார்கள். அங்கிருந்து அனுராதபுரத்திற்கு வந்தார்கள். இப்போது இவர்களுக்கு ஞானசார தேரர் நினைவில் இல்லை. இப்போது அநுராதபுரத்தில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
அநுராதபுரத்தில் எங்கிருந்து வந்த மக்களோ எனக்குத் தெரியாது. எனது தலை உடைந்துவிட்டது. அத்தோடு பிரச்சினை முடிந்துவிட்டது என்றே நான் நினைத்தேன். எனது இரத்தத்தைக் கண்ட பிறகு மக்கள் வந்து அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். எனக்கு வரும் இலட்சக்கணக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு மத்தியில், எதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
இனிமேல் நீங்கள் இந்த ஜனாதிபதியின் காலை வார முயன்றால் இடமளிக்கப்படாது. எனக்கு ஜனாதிபதியிடமிருந்து எதையும் எதிர்பார்க்கத் தேவையில்லை, அரசாங்கத்திடமும் எதுவும் தேவையில்லை, யாரும் என்னை வந்து பார்க்கவும் தேவையில்லை. ஆனால், நான் எதிர்பார்ப்பது மக்களுக்கு ஒரு அழகான நாட்டையும் அழகான எதிர்காலத்தையுமாகும். இந்த ஜனாதிபதியிடமிருந்தோ இந்த அரசாங்கத்தமிடமிருந்தோ காலை இழுத்து, இதைச் செய்ய விடாமல் தடுத்தால் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் கால்களை அசைக்கும்போது நான் அங்கே இருப்பேன். முன்பு போன்றே காணொளிகளை வெளியிடுவேன், நான் வருவேன். இந்த நாட்டு மக்களின் பலமும் சக்தியும் மட்டுமே எனக்கு உள்ளது.
இவர்கள் துடிப்பதெல்லாம் தங்களது நாயகமான காரியங்களைச் செய்வதற்காகத்தான்; பெண்களை வன்புணர்வது, சிறுவர்களை வன்புணர்வது, குழந்தைகளை வன்புணர்வது போன்றவற்றுக்கான சந்தர்ப்பத்தைக் கேட்கிறார்கள். காவி உடைக்கு கை வைக்காதீர்கள், சரியா? நன்றாக நினைவில் கொள்ளுங்கள், வரம்பு மீறி ஆடத் தயாராகாதீர்கள்.என்றார்.
![]()