இலங்கை

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுத்திட்ட வரைபைத் தயாரிப்பதற்கான ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச் சபையின் வழிநடத்தல் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், குடிமக்கள் சமூகத்தினர், கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகக் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய, எதிர்வரும் ஒருமாத காலப் பகுதிக்குள் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு ஒன்றினைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள உபகுழு முன்னெடுக்கவுள்ளது.

இந்தச் செயற்பாட்டில் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளில் தமிழ்த்தேசியப் பேரவை பங்குகொண்டுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தரப்புக்களையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி. தி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேலும், தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பாகப் பொதுமக்களிடம் அபிப்பிராயங்களைப் பெற்றுக்கொள்ளும் குழுவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் குழுவும் சமாந்தரமாகத் தத்தமது வேலைத் திட்டங்களை வகுத்து விரைந்து செயலாற்றவுள்ளன. குறிப்பாக, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு வடிவிலான தீர்வு யோசனைகளும் நிராகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தன்னாட்சியுரிமை, தேசம் மற்றும் இறைமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சித் தீர்வை வலியுறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இக் குழுக்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.

ஏனைய குடிமக்கள் சமூக அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கிப் பயணிப்பதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *