இந்தியாவை எதிர்த்து 60,000 பேரைக் கொன்று குவித்தவர்களே ஜே.வி.பி.யினர்; இன்று இந்தியாவைக் கட்டி அணைக்கின்றனர்

இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி 60ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொலை செய்தவர்கள் தான் இன்று இந்தியாவுக்கு சென்று அங்கு கட்டி அணைத்துக்கொள்கின்றனர் அன்று நாங்கள் இந்தியா, அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ள இடமளித்திருந்தால், பொருளாதார ரீதியில் நாடு அபிவிருத்தியடைந்திருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாடு வங்குரோத்து அடைவதற்கு 76 வருட கால சாபம் எனத் தெரிவிக்க முடியாது.
1994ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியை கையளிக்கும்போது எமது நாடு பாரிய முன்னேற்றமடைந்திருந்தது. எமது ஆடை அணிகலங்களில் பாரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. ஆனால் 94ஆம் ஆண்டுக்கு பின்னர் இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னரே நாடு வீழ்ச்சியடையத் தொடங்கியது
சோசலிச கட்சி என்ற அடையாளம் தற்போது இந்த அரசாங்கத்திடம் இல்லை. அதனால் அமெரிக்கா, ஐராேப்பிய நாடுகளுக்கு சென்று, அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து வருகின்றீர்கள். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் நாங்கள் அன்று அமெரிக்கா, இந்தியா போ்னற நாடுகளுடன் ஒப்ந்தங்களை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக செயற்பட்டு, அந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை நிறுத்தினார்கள்.
இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி , 60ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை 87 காலப் பகுதியில் கொலை செய்தார்கள். ஆனால் இன்று இந்தியாவுக்கு சென்று அங்கு கட்டி அணைத்துக்கொள்கின்றனர் .
அன்று நாங்கள் இந்தியா, அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ள இடமளித்திருந்தால், பொருளாதார ரீதியில் நாடு அபிவிருத்தியடைந்திருக்கும். அதனை நீங்கள் செய்ய இடமளிக்கவில்லை. ஆனால் தற்போது நீங்கள் அதனை செய்ய முயற்சிக்கிறீர்கள்.
அத்துடன் எமது காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம். ஆனால் 94ஆம் ஆண்டுக்கு பிறகு எமக்கு முழுமையான அதிகாரத்துக்கு வரமுடியவில்லை. இன்று நாட்டின் நிலைமையை பாருங்கள், நூற்றுக்கு 1வீதமே முதலீடு இருக்கிறது. வறுமையான நாடொன்றில் முதலீடு நூற்றுக்கு 3 வீதம் இருக்கவேண்டும் என்றே உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தபட்சம் 3 பில்லியன் டொலர் இருக்க வேண்டும்.ஆனால் எமது மொத்த உற்பத்தி ஒரு டொலர் பில்லியனாகும். அதுவும் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டது.அதனால் 2 பில்லியன் டொலருக்கு முதலீடு வந்திருக்கிறதா? முடிந்தால் கூறுங்கள் பார்க்கலாம்.
இந்த அரசாங்கம் முதலீட்டாளர்களை விரட்டினார்கள். அதானி நிறுவனத்தை கொண்டுவந்தபோது அதனையும் விரட்டினார்கள். அதானி நிறுவனத்தை கொண்டுவர இடமளிக்கப்பட்டிருந்தால், இன்று மின்சார உற்பத்தியில் பாரிய முன்னேற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் அரசாங்கத்துக்கு முடியுமாக இருந்தால், 8 சதத்துக்கு குறைவாக 500 மெகாவோட் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம் ஒன்றை கொண்டுவாருங்கள். பார்க்கலாம். முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டுவராமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலராவது எமக்கு தற்போது கிடைத்திருக்கவேண்டும்.
அதனால் கடந்த காலங்களில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, எமது நாட்டுக்கு கொண்டுவர இருந்த முதலீடுகளை,மீண்டும் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.
![]()