இலங்கை

இலங்கையில் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்!; குகைக்குள் கைக்குழந்தையுடன் சிக்கிய சிறுமி

நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள குகை ஒன்றில் 15 வயதான சிறுமி தனது இரண்டு மாதக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

5 மாதங்களாக காணாமல் போயிருந்த இந்தச் சிறுமி மீமுர பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 5 மாதங்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் உடுதும்பர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணையில் சிக்கிய மர்மம்

விசாரணையின் போது, இளைஞர் ஒருவர் உள்ளூர் கடை ஒன்றிலிருந்து வழமைக்கு மாறாக அதிகளவிலான அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாக கொள்வனவு செய்து வந்தமை பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்! குகைக்குள் கைக்குழந்தையுடன் சிக்கிய சிறுமி | 15 Year Old Girl Missing For 5 Months Found

மக்கள் குடியிருப்புகளிலிருந்து விலகி, தொலைதூர வனப்பகுதிக்குள் சென்ற இளைஞனை பொலிஸார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது, பொலித்தின் விரிப்புகளால் மூடப்பட்டிருந்த குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் குகைக்குள்ளேயே காணாமல் போயிருந்த 15 வயதுச் சிறுமியும், அவரது இரண்டு மாதப் பெண் குழந்தையும் பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.

எவ்வித மருத்துவ உதவியுமின்றி அந்தச் சிறுமி குகைக்குள்ளேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் கைது

குழந்தையின் தொப்புள்கொடியை அறுப்பதற்கு, பனை தொழிலில் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதமொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்! குகைக்குள் கைக்குழந்தையுடன் சிக்கிய சிறுமி | 15 Year Old Girl Missing For 5 Months Found

சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகை மருந்துகளைக் கொண்டே தாய்க்கும் சேய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் தந்தை என நம்பப்படும் 23 வயதுடைய குறித்த இளைஞர், பெரிய சட்டியொன்றிலேயே குழந்தையை குளிப்பாட்டியதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய இளைஞரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுமியும் அவரது குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *