வரவு செலவுத் திட்ட வரலாற்றில் 2 ஆவது அதிக நேர உரை; 4மணித்தியாலமும் 50 நிமிடங்களும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நேற்று வியாழக்கிழமை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சபையில் முன்வைக்கப்பட்டு வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட மூன்றாவது வரவு செலவுத் திட்டஉரையாக இது அமைந்ததுடன் இலங்கையில் வரவு செலவுத்திட்ட உரை நேர வரலாற்றில் இரண்டாவது அதிக நேர உரை என்ற சாதனையாகவும் அமைந்தது நேற்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே சபையில் அதனை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியதை தொடர்ந்து சபாநாயகர் அறிவிப்பு முடிந்த பின்னர் தினப் பணிகள் ஆரம்பமான நிலையில், 1.40 மணியளவில் சபைக்குள் ஜனாதிபதி வருகை தந்து வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றத் தொடங்கினார்.
ஜனாதிபதி சபைக்கு வரும் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி அவரை வரவேற்றதுடன், அவர் கையில் வரவு செலவுத் திட்டத்தை கோப்பு ஒன்றில் எடுத்து வந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எங்கே வரவு செலவுத் திட்ட பெட்டி என்று சிரித்துக்கொண்டே கேட்டனர்.
இதேவேளை ஜனாதிபதி உரையாற்றுகையில் முக்கிய விடயங்களை குறிப்பிடும் போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி அதனை வரவேற்றனர். எனினும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உன்னிப்பாக உரையை கேட்டுக்கொண்டிருந்தனர்.
வரவு செலவுத் திட்ட உரையின் போது வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் பலர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததுடன் அவர்கள் சபாநாயகர் கலரியில் இருந்து அவரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தனர்.
அத்துடன் பொலிஸ்மா அதிபர், முப்படைத் தளபதிகள், அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பார்வையாளர் கலரியில் இருந்து ஜனாதிபதியின் உரையை கேட்டுக்கொண்டிருந்தனர்.
தனது வரவு செலவுத்திட்ட உரையை நண்பகல் 1.40 மணிக்கு ஆர்மபித்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலை 6.30 மணிவரை இடைவிடாது நிகழ்த்தியே இலங்கையில் வரவு செலவுத்திட்ட உரை நேர வரலாற்றில் இரண்டாவது அதிக நேர உரை என்ற சாதனையை நிகழ்த்தினார்.
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் வரவு செலவுத் திட்ட உரையை அதிக நேரம் நிகழ்த்திய சாதனை முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலையே சாரும்.1977 ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த தனது முதலாவது வரவு செலவுத் திட்ட உரையை 5 ½ மணித்தியாலங்கள் நிகழ்த்தியதே இலங்கையின் மிக நீண்ட வரவு செலவுத் திட்ட உரையாகப் பதிவாகியுள்ளது.அவர் தனது உரையை 5 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நிகழ்த்தினார்.
அவருக்கு அடுத்ததாக நிதி அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையை 4.மணித்தியாலமும் 30 நிமிடங்களும் நிகழ்த்தி இரண்டாவது அதிக நேர வரவு செலவுத்திட்ட உரை என்ற சாதனையப் படைத்த நிலையில் தனது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையை 4.மணித்தியாலமும் 20 நிமிடங்களும் ஆற்றியிருந்த நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து தனது வரவு செலவித்திட்ட உரையை 4மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் தொடர்ச்சியாக நிகழ்த்தி ரவிகருணாநாயக்கவின் சாதனையை முறியடித்து இரண்டாவது சாதனையாளராக தன்னை பதிவு செய்து கொண்டார்.
வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பார்வையாளர் கலரிக்கு பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ஜனாதிபதியினால் பிற்பகல் 1.40 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரை மாலை 6.30 மணியளவில் நிறைவடைந்தது.
இதேவேளை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனை தொடர்ந்து அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அதன் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது.
![]()