முச்சந்தி

இலங்கை சுற்றுலா வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட இஸ்ரேலியர்; பலரும் கடும் எதிர்ப்பு

இலங்கைக் கடலில் படகுச் சவாரியின் போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கை சுற்றுலா வழிகாட்டியை கடலில் தள்ளிவிடும் காணொலி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்ய ஊடகமான ஆர்.ரி.வெளியிட்டுள்ள அந்தக் காணொலியில் இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குழுவில் ஒருவர், சுற்றுலா வழிகாட்டியை திடீரென கடலுக்குள் தள்ளிவிடுவது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இணையத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு நடந்து கொள்ளும் முறைக்கும், உள்ளூர் வழிகாட்டி நடத்தப்பட்ட விதத்திற்கும் பலரும் தமது எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த காணொளியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான டானியல் அம்ரம் , பின்னதாக இந்தச் சுற்றுலாப் பயணிகளின் விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, இது ஒரு விளையாட்டுக்காக (ஜோக்) மட்டுமே செய்யப்பட்டதாகவும், இந்தத் திட்டமிட்ட நகைச்சுவைச் செயல் குறித்து அந்தச் சுற்றுலா வழிகாட்டி முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும், அவரும் இதற்கு உடந்தையாகவே இருந்தார் என்றும் அவர்கள் கூறியதாக அம்ரம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த வழிகாட்டியை அவமானப்படுத்தும் எண்ணமோ அல்லது அவரது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கமோ தங்களுக்கு இல்லை என்றும், இச்சம்பவத்தில் அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“இது ஒரு விளையாட்டு மட்டுமே, ஊழியர் நலமாக உள்ளார், தவறான நோக்கத்தில் இது செய்யப்படவில்லை” என்று அந்த சுற்றுலாப் பயணிகள் தெரிவித்ததாக ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *