இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியை நோக்கிப் பயணிக்கிறது; ராஜித எச்சரிக்கை

அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தின் தோல்வி மற்றும் இயலாமை காரணமாக நாட்டின் பொருளதாரம் நெருக்கடி நிலையை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு முறையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், 2022 ஆம் ஆண்டில் அனுபவித்த இருண்ட பொருளாதார பின்தங்கிய நிலைமைக்கும் வங்குராேத்து நிலைக்கும் நாடு தள்ளப்படுவதை தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில்  நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவ தோல்வி மற்றும் இயலாமை காரணமாக, நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டைபோன்ற கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வங்குராேத்து நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஆட்சியாளர்களின் திறமையின்மையை மூடிமறைப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் ஊடாக போராட்டங்களை அடக்கும் போக்கிலான சூழல் எழுந்துள்ளது.

அண்மையில் விகாரமஹாதேவி பூங்காவிலும் அனுராதபுரப் பகுதியிலும் பௌத்த துறவிகளுக்கு எதிராக பொலிஸாராலும் சில தரப்பினராலும் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த அடக்குமுறை வேலைத்திட்டம் காரணமாக ஜீஎஸ்பி + வரிச்சலுகை கூட இழக்கப்பட்டு, ஆடைத் தொழில் உள்ளிட்ட ஏற்றுமதித்துறை கடுமையான ஆபத்திற்கு உள்ளாகும் அபாயமும் இப்போது உருவாகியுள்ளது. அதேநேரம் நாட்டின் மொத்த பொதுக் கடன் நிலைமை மிகவும் பயங்கரமான வகையில் உயர்ந்துள்ளது.

29.5 டிரில்லியன் ரூபாவாக இருந்த மத்திய அரசின் கடன் தொகை தற்போது 32 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது. உள்நாட்டுக் கடன் தொகை 18 டிரில்லியனில் இருந்து 19 டிரில்லியன் வரை அதிகரித்துள்ளது. 11.5 டிரில்லியனாக இருந்த வெளிநாட்டுக் கடன் தொகை தற்போது 12.7 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது.

பல்வேறு 12 வகையான வரிகளை உயர்த்தியதன் காரணமாக, நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் 72 வீதத்திலிருந்து 57 வீதமாக குறைந்துள்ளனர்.

மேலும், இலங்கை உலகில் அதிக வரி செலுத்தும் நாடாக சர்வதேச சாதனைக்கு நெருங்கியுள்ளது. ஆசியாவில் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளதுடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களில் சுமார் 75வீதம் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

இதுதவிர, பங்குச் சந்தையிலிருந்து 171 மில்லியன் டொலர் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன், பல பிரம்மாண்டமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்க காலத்தில் குறைந்திருந்த அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள், தற்போதைய ஆட்சியின் கீழ் பாரியளவில் அதிகரித்துள்ளன. ரணில் விக்ரமசிங்க நாட்டை ஒப்படைக்கும் போது 320 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்று, இன்று 424 ரூபாய் வரை அதிகரித்து 104 ரூபாவால் அதிகரித்துள்ளது. 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் இன்று 490 ரூபாவாகும். 304 ரூபாவாக இருந்த டீசல் லீட்டர் 397 ரூபாய் வரை அதிகரித்து 93 ரூபாவால் அதிகரித்துள்ளது.

3690 ரூபாவாக இருந்த எரிவாயு சிலிண்டர் இன்று 4365 ரூபாவாகும். 292 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் விலை இன்று 330 ரூபாயைத் தாண்டி உயர்ந்துள்ளது.

இந்த பொருளாதாரத் தரவுகள் மற்றும் நெருக்கடி நிலைமையைத் தவிர்ப்பதற்கு முறையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் சில மாதங்களில் நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டில் அனுபவித்த இருண்ட பொருளாதார பின்தங்கிய நிலைமைக்கும் வங்குராேத்து நிலைக்கும் தள்ளப்படுவதைத் தடுக்க முடியாமல் போகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *