இலங்கை

மயிலத்தமடு பகுதிக்குள் புகுந்த இராணுவத்தினர்!;  துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதால் அஞ்சித் தறிகெட்டு ஓடும் மாடுகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில் அத்துமீறி விவசாயம் செய்யும் பெரும்பான்மைய இனத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி அங்குள்ள மேச்சல் தரைப் பகுதியை வர்த்தமானிப் பிரகடனம் செய்து சட்டபூர்வமான மேய்ச்சல்தரையாக மாற்றித்தருமாறு கோரி மிக நீண்ட காலமாக போராடி வரும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் மற்றுமொரு பேரிடி வீழ்ந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் இராணுவத்தினர் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதனால் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களாலும் அவர்களின் அதிகரித்த நடமாட்டத்தாலும் விரண்டு ஓட்டம் எடுக்கின்றன. இவ்வாறு இராணுவத்தினைக் கண்டு பயம் கொண்டு கால்நடைகள் காடுகளுக்குள் ஓடி ஒழிகின்றன.

மேலும் இவ்வாறு ஓடுகின்ற கால்நடைகள் மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களின் பயிர்களுக்குள்ளும் செல்கின்றன.இதனால் மீண்டும் ஓர் இன வெறுப்புக்கள் உண்டு பண்ணக் கூடிய சூழல் ஏற்படுவதாக அப்பகுதி பண்ணையாளர்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரின் கிழக்கு மாகாணத்துக்குரிய பிரதான பயிற்சி பெறும் பகுதியாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலதமடு மாதவனைப் பிரதேசம் காணப்படுகின்றது.

அப்பகுதியில் இராணுவத்தினருக்கான குறி பார்த்துச் சுடுதல், தலைமைத்துவம், பாசறை அமைத்தல், காட்டுப் பகுதியில் முகாம் இட்டு இருத்தல், உள்ளிட்ட பல பயிற்சிகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக அங்குள்ள கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதினால் தற்போதைய மழை காலத்திலும் தமது கால்நடைகளை தொடர்ந்து அப்பகுதியில் வளர்ப்பதிற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

அத்துடன் இராணுவத்தினரைக் கண்டு ஓட்டம் எடுக்கும் கால்நடைகளை, தற்போதைய மழையுனான காலநிலைக்கு மத்தியில் கட்டுப்படுத்துவதென்பது மிகுந்த சிரமமாகவுள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர், உள்ளிட்ட சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வருவதுடன் இராணுவத்தினரின் பயிற்சிகளை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *