கவிதைகள்

“தீபாவளித் திருநாள்  தித்திக்கும் கொண்டாட்டம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
                மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 
 
உள்ளங்கள் திருந்திட உள்ளங்கள் உயர்ந்திட
உள்ளங்கள் மகிழ்ந்திட உயர்வான நாளாய்
எண்ணியே முன்னோர்கள் தேர்ந்துமே எடுத்தார்
இன்பமாய் கொண்டாடத்  தீபத்திரு  நாளை 
 
மத்தாப்பு மலரும் பட்டாசு வெடிக்கும்
புத்தாடை புத்துணர்வு கூடவே சேரும்
எத்தனையோ பட்சணங்கள் இல்லங்கள் எங்கும்
வரவேற்று நிற்கும் மனம்மகிழ்ந்து துள்ளும்
 
தீபாவளிக் கென்று கதையொன்றும் இருக்கு
தீமையின் உருவான அரக்கனது கதையே
அரக்கனைச் சக்தி அழித்த தினமதனை
அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார் மண்ணில் 
 
தீமையின் உருவாக அரக்கன் அன்றிருந்தான்
அழிந்தது ஆனந்தம் என்றுமே இருந்தோம்
ஆனாலோ பலவரக்கர் திசைதோறும் வருகிறார்
அம்பிகையை வேண்டுவோம் அவ்வரக்கர் தோன்றாமல் 
 
கொண்டாட்டம் என்றால் எல்லோர்க்கும் இன்பமே
தீபாவளித் திருநாள் தித்திக்கும் கொண்டாட்டம்
பெரியவரும் சிறியவரும் பெருமகிழ்ச்சி கொண்டு
பக்தியுடன் கொண்டாடும் பாங்கான திருநாள்
 
உற்றார்கள் வருவார் உறவுகள் வருவார்
உரிமையுடன் உடனிருந்து விருந்துண்டு மகிழ்வார்
ஆலயங்கள் எங்கும் தீபமாய் ஒளிரும்
அனைவருமே வழிபட்டு ஆண்டவனைத் தொழுவார் 
 
இல்லாரும் மகிழ்வார் இருப்பாரும் மகிழ்வார்
இருப்பதைக் கொண்டு எல்லோரும் மகிழ்வார்
திருப்தியாய் இருப்பதே சிறந்த திருநாளாம்
தீபாவளித் திருநாள் திருப்தியைக் கொடுக்கட்டும் 
 
மனநிறைவு மனமகிழ்வே கோண்டாட்டம் ஆகும்
மாநிலத்தில் மக்கள் மனம்நிறைய வேண்டும்
மனம்நிறைய வைத்திடென மனமார வேண்டி
மாசக்தி அம்மனை வழிபட்டு நிற்போம் 
கலைவிழா நடக்கும் கலைநிகழ்ச்சி சிறக்கும்
பாட்டுமன்றம் பட்டிமன்றம் பாங்காக நடக்கும்
அனைவரும் பார்ப்பார் அகமகிழ்ந்து நிற்பார்
அவனியிலே தீபாவளி ஆனந்தமாய் ஜொலிக்கும்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *