இலங்கை

கோட்டாபய ஆட்சியை விட மோசமான நிலை ஏற்படும் : புதிய சட்டம் குறித்து சாமர சம்பத் எச்சரிக்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டால், 6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதை விட மோசமான நிலையே இந்த அரசாங்கத்துக்கும் இடம்பெறும். அதேநேரம் ஜனாதிபதி முதல் அதிகமானவர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களே தற்போது ஆட்சி செய்து வருகிறார்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டமூலத்தை சமர்ப்பித்திருக்கிறது. ஆனால் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டுவந்து பயனில்லை. ஏனெனில் இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள். 88,89 காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். ஜனாதிபதி முதல் அதிகமானவர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களே ஆட்சி செய்து வருகிறார்கள். ராணுவ முகாம், பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கு சட்டம் எதற்கு என கேட்கிறோம்.

அத்துடன் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்களை 24 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்துவிட்டே நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்துகிறார்கள். ஆனால் இந்த சட்டம் அனுமதிக்கப்பட்டால் 72 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஹோமாக பாெலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் எல்லோருக்கும் தெரியும். இறுதியில் பாெலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கொழும்பு விலக்கமறியல் சிறைச்சாவைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் அவரை சிறைச்சாலைக்குள் கொண்டுவர சிறைச்சாலை கைதிகள் இடமளிக்கவில்லை. அதனால் அவரை கண்டி தும்பர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றார்கள். அதனால் எந்த சட்டம் கொண்டுவந்தாலும் பயனில்லை.

அதேநேரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் பலர் இன்று சிறைச்சாலையில் இருக்கிறார்கள். பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் இருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் கூறும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளச் சென்றால், இந்த நிலையே தற்போதுள்ளவர்களுக்கும் இடம்பெறும். அதனால் பொலிஸ் சகோதரர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஹோமாகம பாெலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் இருந்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸூக்கு பொறுப்பான அமைச்சர், பொலிஸ் மா அதிபர் என அனைவரும் தப்பிக்கொண்டனர். இறுதியில் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சிறைக்கு சென்றார்.

அத்துடன் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்

நிறைவேற்றப்பட்டால், பொலிஸாருக்கு இன்னும் ஆபத்து ஏற்படும். கைதுசெய்யப்படுபவர்களை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தால், பொலிஸ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதனால் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த சட்டம் அனுமதிக்கப்பட்டால், 6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதை விட மோசமான நிலையே ஏற்பட்டு, வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். அதனால் அரசாங்கம் என்ன சட்டம் கொண்டுவந்தாலும் பரவாயில்லை. பொலிஸ் அதிகாரிகள் தங்களின் தொழிலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *