கவிதைகள்

பண்பிழந்து தடம் பிறழ்தல் அழகோ?….  கவிதை… சங்கர சுப்பிரமணியன்

உடனடியாக எடுத்த முடிவென்றாலும்
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
திரும்பிவந்து கொழுகொம்பை நட்டு
அதில் கொடியை படர விடவில்லை

தேரை திருப்பி எடுத்துச் செல்லாமல்
பாரி விட்டுச் சென்றதன் காரணமேன்
அது செய்த செயலில் இருந்து பிறழாத
பண்புடையோர் பெற்ற அருங்குணமே

வேண்டும்போது பயன்படுத்திக் கொண்டு
வேலை முடிந்ததும் வீசிடும் எச்சிலையாக
செயலைச் செய்திடும் மாய வித்தையதை
வள்ளல் பாரி தான் ஏன் கற்காது விட்டான்

பின்னாளில் இதைச்செய்து முடித்திடவும்
பலர் அணிதிரள்வர் என அறிந்திருப்பான்
வீணாய் பெயருக்கு களங்கம் வேண்டாம்
என எண்ணியுமே வீணே இருந்திருப்பான்

வருங்காலம் வழுக்கிடும் மக்கள் வருவரென
உணர்ந்து அச்செயலை தவிர்த்திருப்பான்
அதனை கண்கூடாய் காண்கிறோம் இன்று
இப்படி நற்பண்பிழந்து தடம் புரண்டதேன்?

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *