உலகம்

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான பைனான்ஸ் (Binance), தனது தளத்திலிருந்து திருடப்பட்ட 6.3 பில்லியன் டொலர் மதிப்பிலான டோக்கன்களில் 95 சதவீதத்தை மீட்டெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பயனர்கள் படிப்படியாகப் பணத்தை மீளப் பெறுவதற்கான வசதியை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை கிரீன்விச் நேரப்படி காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரையான காலப்பகுதியில் பணம் மீளப்பெறும் வசதி கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியின் கீழ் பிட்கொயின் (Bitcoin), ஈதர் (Ether), BNB, சோலானா (Solana), XRP, டோஜ்கொயின் (Dogecoin) உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோகரன்சிகளை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், திருடப்பட்ட சொத்துக்களில் எஞ்சியுள்ள 5 சதவீதத்தை மீட்டெடுப்பதற்கு அதிக காலம் தேவைப்படலாம் என பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

எஞ்சியுள்ள சொத்துக்கள் எளிதில் பணமாக மாற்ற முடியாத தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைத் தேவையான அளவில் திரட்டுவதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் அந்நிறுவனம் சனிக்கிழமை பிற்பகுதியில் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டிஜிட்டல் உலகில் இடம்பெற்ற மிகப்பெரிய திருட்டுச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்துடன் வட கொரியாவுக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான எஃப்.பி.ஐ (FBI) குற்றஞ்சாட்டியுள்ளது.

டிரேடர் டிரெய்டர்’ (TraderTraitor) என அழைக்கப்படும் வட கொரிய அரசின் ஆதரவுடன் செயற்படும் சைபர் குழுவே இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதாக எஃப்.பி.ஐ சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

எனினும், உளவு நடவடிக்கைகள், நிதித் திருட்டு மற்றும் வருவாய் ஈட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக அரசுடன் தொடர்புடைய சைபர் பிரிவுகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வட கொரியா பல ஆண்டுகளாக மறுத்து வருகிறது.

இந் நிலையில், ஜெனீவா மற்றும் சீனாவில் உள்ள வட கொரியத் தூதரகங்களிடம் கருத்துக் கோரப்பட்ட போதிலும், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மேலும், திருடப்பட்ட சொத்துக்களை எத்தேரியம் (Ethereum) கிரிப்டோகரன்சியாக மாற்றும் நடவடிக்கையைத் தமது அதிகாரிகள் கண்காணித்துள்ளதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அத்துடன், தொடர்புடைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறித்த சொத்துக்கள் மேலும் பணமோசடி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *