எனது இறுதி மூச்சு வரை மக்களுக்குச் சேவையாற்றுவேன்”: பிரதமர் மோடி

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்குச் சேவையாற்றுவேன் என இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், 14,000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன்போது தனது 25 ஆண்டுகால பொது வாழ்க்கைப் பயணம் குறித்துப் பேசிய மோடி, 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி முதன்முதலாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாகவும், அன்றிலிருந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
தனது 25 ஆண்டுகால பொதுவாழ்வுப் பயணம் நேற்றுதான் ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு இருப்பதாகத் தெரிவித்த அவர், இறுதி மூச்சு வரை மக்களுக்குச் சேவையாற்றுவேன் எனக் கூறினார்.
விவசாயிகளின் நலன் குறித்து கருத்து
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் உரத்தின் விலை அதிகரித்தபோதிலும், அதன் சுமை விவசாயிகள் மீது சுமத்தப்படாமல் தமது அரசாங்கம் பாதுகாத்ததாக மோடி தெரிவித்தார்.
இதற்காக அரசாங்கம் 16 இலட்சம் கோடி ரூபாவைச் செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு 4.5 இலட்சம் கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உரத் தட்டுப்பாடு தொடர்பில் வதந்திகள் பரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டு
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைப் பயன்படுத்தி, உரம் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு தொடர்பில் சிலர் வதந்திகளைப் பரப்புவதாகவும், அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் மோடி குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் சவாலான சூழ்நிலையைக் கண்டு சிலர் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் விமர்சித்தார்.
விவசாயத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு
“விவசாயம் எமது கலாசாரமாகும்” எனக் குறிப்பிட்ட மோடி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுவரை 26 கோடிக்கும் அதிகமான மண் வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கால்நடை வளர்ப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது எனவும் மோடி சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் மற்றும் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
![]()