பலதும் பத்தும்

AI தொழில்நுட்பத்தில் பாரிய முதலீடு ; மைக்ரோசொப்ட் இலாபத்திலும் வளர்ச்சி

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டு வரும் மைக்ரோசொப்ட் நிறுவனம், ஊழியர் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலப்பகுதியில் 36.6 பில்லியன் டொலருக்கும் அதிகமான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் நிறுவனத்தின் வருமானம் 92.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 19 சதவீத அதிகரிப்பாகும் எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிளவுட் சேவைகள் வணிகத்தில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மைக்ரோசொப்ட் கிளவுட் சேவையின் வருமானம் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

AI தொழில்நுட்பத்தில் பாரிய முதலீடு ; மைக்ரோசொப்ட் இலாபத்திலும் வளர்ச்சி | Massive Investment Ai Technology Microsoft Growth

இந்த நிதி முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நியூயோர்க் பங்குச் சந்தையின் பிந்தைய வர்த்தகத்தில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதற்குச் சில நாட்களுக்கு முன்னர், கனடா, இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தகுதிபெறும் ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து விலகுவதற்கான நிதிச் சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் அறிவித்திருந்தது.

இதன்படி, சுமார் 60,000 ஊழியர்களுக்கு இந்தச் சலுகைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பணியிலிருந்து விலகும் ஊழியர்களுக்கு நிதி உதவி மற்றும் தொழில் திட்டமிடல் தொடர்பான வளங்களும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் 220,000க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், பல்வேறு தொழில்துறைகளுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்காக மேற்கொள்ளப்படும் கணிசமான முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள், நிறுவனத்தின் நிதிச் செயற்பாடுகளில் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் மைக்ரோசொப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *