பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 20… செங்கதிரோன்


நம்ப முடியாத – நம்ப மனம் விரும்பாத அதிர்ச்சிச் செய்தி
நாடறிந்த எழுத்தாளரும் தொழிற்சங்கவாதியும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளருமான மலையக மைந்தன் மு.சிவலிங்கம் அவர்கள் 24.09.2026 அன்று அமரத்துவமடைந்த செய்தியை நண்பர்கள் சிராஜ்மஸ்சூர் மற்றும் மல்லியபூச்சந்தி திலகர் ஆகியோரின் முகநூல் பதிவுகளினூடாக அறிய நேர்ந்தபோது அதிர்ச்சியால் ஒரு கணம் உறைந்துபோனேன். செய்தியை நம்பமுடியாமல் – நம்ம மனம் விரும்பாமல் தவித்தது, தடுமாறியது.
அண்மையில்தான் அன்னாரின் அகவை எண்பது நிறைவினையொட்டி, சு. முரளிதரன் மற்றும் மல்லியபூச்சந்தி திலகர் போன்ற மலையகக் கலை இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் அமுதவிழா நிகழ்வும் அதனையொட்டி ‘சிவாமுதம்’ எனும் அமுதவிழா மலர் வெளியீடும் இடம்பெற்றிருந்தன.
இவ்வளவு விரைவாகக் காலன் அன்னாரது உயிரைக் கவர்ந்து செல்வனென்று கனவிலும்கூட எண்ணவில்லை. அன்னாரது மறைவினால் கண்கள் பனித்து அன்புகெழுமிய இலக்கிய நண்பனொருவனை இழந்த ஏக்கத்தில் இதயம் அழுதது.
ஒன்றரை வருடத்திற்கு முன்பு மலையகத்தில் கொட்டகலை ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மலையகப் பிராந்தியத் தலைவர் வியாத்தன் சலக்ஷரன் ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈழத்தமிழ்க் கவிஞர் ஒன்றிய மத்திய குழுவின் இரண்டாவது செயலமர்வு 16.03.2025 அன்று நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்புப் பிராந்தியத் தலைவரான நானும் ஈழத்தமிழ்க் கவிஞர் ஒன்றியத்தின் மத்திய குழுவின் துணைத்தலைவரான தேவ அலோசியஸ் மற்றும் அவரது மனைவி டிவதர்சினி (ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றிய மத்திய குழு உறுப்பினரும் மகளிர் விவகாரப் பொறுப்பாளரும்) ஆகியோரும் மலையகம் சென்றிருந்தோம்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் சமகாலத்தில் கல்விகற்ற தேவ அலோசியஸின் நண்பர் புருசோத்தமன் என்பவரின் கொட்டகலை வீட்டில்தான் தங்கினோம்.
மத்திய குழுவின் செயலமர்வு முடிந்து எனது வேண்டுகோளையேற்று புருஷோத்தமன் எம்மை மு.சிவலிங்கம் அவர்களின் இல்லத்திற்குக் கூட்டிச்சென்றார். துரதிஸ்டவசமாக நாம் சென்றவேளை அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். தொலைபேசியில் உரையாடியபோது நான் வந்தவேளை தான் வீட்டில் இல்லையே என்று மிகவும் கவலைப்பட்டார். அச்சந்தர்ப்பந்தான் நான் அவருடன் இறுதியாகத் தொலைபேசியிலாவது உரையாடியது. இந்நினைவுகள் நெஞ்சை அழுத்துகின்றன.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக எனது குடும்பத்துடன் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு 1990 இல் இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கொழும்பு வாசியானதும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தீவிர செயற்பாட்டாளனானேன். அக்காலத்தில்தான் மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களுடனான அறிமுகமும் நட்பும் கிடைத்தன.
கொழும்புத்தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் அவ்வப்போது சந்தித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோது ஏனைய மலையக எழுத்தாளர்களான தெளிவத்தை யோசப் – அந்தனிஜீவா – சாரல்நாடன் – சு. முரளீதரன் – பதுளை சேனாதிராஜா போன்றோர்கள் சகிதம் மு. சிவலிங்கம் அவர்களுடனும் நெருங்கி ஊடாடும் வாய்ப்புகளும் வந்து சேர்ந்தன. அந்தனி ஜீவாவுடனான எனது நெருங்கிய நட்பு மலையக எழுத்தாளர்கள் பலரின் அறிமுகத்தையும் நட்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தன. அவர்களுள் மு. சிவலிங்கமும் முக்கியமானவர்.

எனக்கு இடதுசாரி அரசியல் சித்தாந்தங்களின்பாலிருந்த ஈடுபாடு – வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண அரசுக் காலத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியுடன் எனக்கிருந்த நெருக்கம் – எனது அரசியல் மற்றும் கலை இலக்கியப் பின்னணி பற்றி அந்தனிஜீவா மூலமோ என்னவோ அறிந்து கொண்டு என்னுடன் நெருக்கமாகப் பழகினார். எனக்கும் அவரைச் சகலவிதங்களிலும் பிடித்தே இருந்தது. அதன் விளைவாக நாமிருவரும் அன்புகெழுமிய கலை இலக்கிய அரசியல் நண்பர்களாயினோம். கால் நூற்றாண்டைக் கடந்தும் எமக்கிடையேயிலான உறவும் ஊடாட்டமும் எந்தப் பிசிறுமின்றி அவர் மரணிக்கும்வரை தொடர்ந்தது.
கவிஞர் நீலாவணன் எழுதி முற்றுப்பெறாத ‘வேளாண்மை’க் காவியத்தைத் தொடர்ந்து ‘விளைச்சல்’ எனும் பெயரில் நான் படைத்த குறுங்காவியத்தைச் சிலாகித்து நண்பர் மு. சிவலிங்கம் அவர்கள் ஞாயிறு தினக்குரல் ‘பனுவல்’ பகுதியில் (26 மே 2019) எழுதியிருந்த கட்டுரை என் நினைவில் எழுகிறது.

மேலும், எழுத்தாளர்களான தி. ஞானசேகரன் – ஜின்னாஹ் ஹரிபுத்தீன் – க. பரணீதரன் ஆகியோருடன் தானும் இணைப்பாளர்களிலொருவராக இருந்து 24.03.2019 அன்று கொழும்புத்தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் நிகழ்த்தப்பெற்ற ‘இலங்கைத்தமிழ் எழுத்தாளர் பேரவை’ யின் அங்குராப்பண நிகழ்வு மு. சிவலிங்கம் அவர்களின் கலை இலக்கியச் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க பதிவாகும். அதன் மத்திய செயற்குழுவில் நானும் இடம்பெற்றேன்.
2008 ஜனவரியிலிருந்து ஆரம்பித்து 2013 ஜனவரி வரைக்கும் மட்டக்களப்பிலிருந்து நான் மாதாமாதம் வெளிக்கொணர்ந்த ‘செங்கதிர்’ கலை – இலக்கிய – பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழின் கிரமமாக வாசகராகவும் அவர் விளங்கினார்.
‘செங்கதிர்’ இன் மே 2009 இதழ் (வீச்சு – 17) மலையகச் சிறப்பிதழாக வெளிவந்திருந்தது. இதில் அவர் ‘மலையகத்தில் நாட்டுப்புறக் கூத்துக்கள்’ எனும் கட்டுரையைத் (பக் 29 – 35) தீட்டியிருந்தார். இக்கட்டுரையின் முகப்பில் ‘செங்கதிர்’ ஆசிரியராக நான் எழுதியிருந்த அவர் பற்றிய குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்ளவும் விழைகின்றேன்.

கடந்த 19.09.2026 சனிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் நடைபெற்ற பாரதி இராஜநாயகம் எழுதித்தொகுத்த “இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்” (அரசியல் கட்டுரை நூல்) தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வுக்குச் சென்றிருந்த நான் அங்கு இலக்கிய மற்றும் அரசியல் நண்பர்களான தோழர் மல்லியபூச்சந்தி திலகர், சிராஜ்மஸ்சூர் ஆகியோரைச் சந்திக்கவும் சிறிது நேரம் அவர்களுடன் சிவலிங்கம் அவர்களின் சிறப்பான பண்புகளைக் குறித்துச் சிலாகித்துப் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் தோழர் திலகரிடமிருந்து கடந்த ஒருவருட காலமாக சிவலிங்கம் உடல் பலவீனமுற்றிருந்தமையையும் தொண்டைப்பிரச்சினை காரணமாக அவரது பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டிருந்தமையையும் நான் அறிந்து கொண்டேன். இவ்வளவு விரைவாக அன்னார் எம்மைவிட்டுப் பிரிந்து செல்வாரென்று எண்ணவேயில்லை.
அன்னாரின் மறைவால் மலையகத்தின் மண் சோகம் அப்பிக்கிடக்கிறது. மரணம் இயற்கையென மனதைத் தேற்றுவதைத்தவிர துக்கத்தைத் தாங்க வேறுவழிதெரியவில்லை.
![]()
