இலங்கை

செம்மணிப் புதைகுழி விவகாரம்; நீதிமன்றத்தின் ஊடக அடுத்த நடவடிக்கை

தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கையில் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் பல இருக்கின்றன. அது குறித்து, வருகிற நாட்களிலே நாங்கள் சில நடவடிக்கைகள் எடுப்போம். நான் ஏற்கனவே நீதிமன்றத்திலே ஆஜராகி இது சம்பந்தமான பல விடயங்களை முன்வைத்திருக்கிற காரணத்தினாலே, அடுத்த நீதிமன்றத் தவணையிலே அதனைச் செய்வதாக உத்தேசிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி அறிக்கை நாங்கள் முழுமையாகப் படித்து, அதற்கான ஒரு மறுப்பை கொடுக்க வேண்டும். ஏற்கனவே, பேராசிரியர் ராஜ் சோமதேவா இரண்டு இடைக்கால அறிக்கை இதற்கு முதல் கொடுத்திருக்கிறார். இப்பொழுது கொடுக்கப்பட்டது மூன்றாவது இடைக்கால அறிக்கை.

முதல் கொடுத்த இரண்டு அறிக்கையிலும் “மனிதப் புதைக்குழி” என்கின்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குற்றச் செயல்கள் இடம்பெற்றதற்கான தடயங்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறார். ஆகவே, மூன்றாவது இந்த இடைக்கால அறிக்கையிலே, அதற்கு மாறுபட்ட கருத்தை அவர் சொல்லியிருப்பதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், இதுவொரு இடைக்கால அறிக்கை; அதுவும் ஒரு தொல்லியல் நிபுணருடைய இடைக்கால அறிக்கை. ஆகையினாலே, நாங்கள் ஏற்கனவே சொன்னதைப் போல, இந்த நிலையிலேயே சர்வதேச நிபுணத்துவம் தேவையாக இருக்கிறது. சர்வதேச மேற்பார்வை இல்லாமல், செய்யப்படுகிற இந்த அகழ்வாராய்ச்சியிலே, ஒருவர் இப்படியான ஒரு அறிக்கையைக் கொடுத்து விடுவது, மிகவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உண்மைத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

ஆகவே, திரும்பவும், இந்த அகழ்வு வேலைகள் நடைபெறுகிற வேளையிலேயே, சர்வதேச நிபுணத்துவம் அங்கே கட்டாயம் இருக்க வேண்டும். இப்பொழுது கொடுக்கப்பட்ட இந்த அறிக்கை, அதன் முக்கித்துவத்தையும் வலியுறுத்துகிறது.

ஆனால், அறிக்கையில் இருக்கிற முரண்பாடான கருத்துக்கள், அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் பல இருக்கின்றன. அது குறித்து, வருகிற நாட்களிலே நாங்கள் சில நடவடிக்கைகள் எடுப்போம். நான் ஏற்கனவே நீதிமன்றத்திலே ஆஜராகி இது சம்பந்தமான பல விடயங்களை முன்வைத்திருக்கிற காரணத்தினாலே, அடுத்த நீதிமன்றத் தவணையிலே அதனைச் செய்வதாக உத்தேசிக்கிறேன் – என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஏற்கனவே இந்த செம்மணி புதைக்குழி விவகாரம் சம்பந்தமாக, இது தொடர்ந்து சரியான பாதையில் முன்னெடுக்கப்படுமா என்ற அச்சம் தமிழ் மக்கள் எல்லோருக்குமிருக்கின்றது. ஏனென்றால் முன்னரும் வடக்கில் புதைகுழிகள் எல்லாம் கைவிடப்பட்ட விவகாரங்களாகப் போய்விட்டது. ஆகவே, இங்கே இப்பொழுது வந்து கொடுக்கப்பட்டிருக்கிற அறிக்கை என்பது நிச்சயமாக, அது ஒரு புதைக்குழி என்ற விவகாரமோ அல்லது வந்து, இது ஒரு தொற்றுநோயால் ஏற்பட்டது என்றோ, இல்லை என்று சொல்லவொன்று சொன்னால், ஒரு இயற்கையான அனர்த்தத்தால் ஏற்பட்டது என்று சொல்லி, போன்ற பல விஷயங்களை அவ்வாறு இருக்கலாம் என்று சொன்ன பல விஷயங்கள் சொல்லப்பட்டது என்பது, மக்கள் மத்தியில் இதுவும் பூசிமெழுகப்படலாம், இதுவும் பின்னுக்குப் போடப்படலாம், இந்த அரசாங்கமும் முன்னர் இருந்த அரசாங்கங்கள் செய்வதைப் போன்றேதான் செய்யப்போகிறது என்று சொன்ன ஒரு அச்சம், இந்த அறிக்கையின் மூலம் தமிழ் மக்கள் எல்லோருக்குமிருக்கின்றது.

நிச்சயமாக இந்த நேரத்தில் எங்களுக்கு சர்வதேச அனுசரணை என்பது பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் அந்த அனுசரணைக் கொண்டுவராவிட்டால், நிச்சயமாக இந்த அரசாங்கத்திடம் அதற்கான தொழில்நுட்பங்களோ, அதற்கான ஆளணிகளோ எதுவும் இவர்களிடம் கிடையாது.

ஆகவே, அந்த வகையில் நாங்கள் நூறு வீதம் நம்புகிறோம், அது ஒரு சர்வதேச கண்காணிப்பு அனுசரணை என்பது மிக மிக முக்கியமானவை – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *