கவிதைகள்

அனைத்தும் வாழ்வியல் தத்துவம் ஆகும்!… கவிதை… ஜெயராமசர்மா

விரதம் இருப்பதில் விவாதம் வேண்டாம்
விரதம் இருந்தால் வில்லங்கம் அகலும்
விரதம் என்பது உடலுளம் திருத்தும்
அதனால் விரதம் அனுட்டிக்கத் தொடங்கினார்

முன்னோர் சொன்னவை முடங்கிட அல்ல
முன்னோர் மொழிந்தவை நன்மையே நல்கும்
முன்னோர் சிந்தனை சமயம் ஆனது
சனாதனம் என்றுமே சொல்கிறோம் அனைவரும்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விரதம்
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விரதம்
வருடம் முழுவதும் வந்திடும் விரதம்
சமயம் தந்திடும் நல்வழி ஆகும்

உடலும் உளமும் உரமாய் இருந்தால்
உலக வாழ்வு உன்னதம் ஆகும்
தளர்ந்த மனமும் துவண்ட உடலும்
தரித்திரம் என்பதை உணர்ந்திடல் வேண்டும்

சமய தத்துவம் வாழ்வியல் ஆகும்
வாழ்வியல் என்பது மனிதர்க்கு முக்கியம்
மனித வாழ்வு புனிதம் ஆகிட
வாழ்வியல் தத்துவம் வரமே எனலாம்

உற்றநோய் நோற்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
பக்குவம் பேணிப் பட்டினி கிடத்தல்
இறையை எண்ணுதல் ஏற்றதைச் செய்தல்
அனைத்தும் வாழ்வியல் தத்துவம் ஆகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *