மயிலத்தமடு-மாதவனை பிரச்சினை உச்சத்தில் மட்டு.எல்லையில் பெரும் இன மோதல் ஏற்படலாம்

மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை விடயத்தில் அரசாங்கம் மிக கவனமாக, மிக வேகமாக தீர்வுகாணாது விட்டால் விரைவில் மிகப்பெரிய இனமுறுகல் அல்லது மிகப்பெரிய இன மோதல் ஏற்படும்.எனவே இவ்விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இளையதம்பி ஸ்ரீநாத் வலியுறுத்தினார்
பாரிய நிலப்பரப்புகள் வேறு மாவட்டங்களில் உள்ள போதும், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வேறு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ள போதும், கால்நடைளை மேய்ச்சல் தரைகளில் விட இடமளிக்காமல் அவற்றை தடுப்பதன் மூலம் அங்கு இனப் பதற்றமான சூழலை ,மோதலைஉருவாக்கும் சதிகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஸ்ரீநாத் எம்.பி மேலும் பேசுகையில்,
சமகாலத்தில் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். இந்நேரத்தில் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது வரவேற்கத்தக்க விடயம். ஒரு பக்கத்தில் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை செய்துகொண்டு மறு பக்கத்தில் எமது மாவட்டத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை பாதிக்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக மயிலத்தமடு மற்றும் மாதவனை விடயத்தில் மீண்டும் கவனத் செலுத்த வேண்டியுள்ளது. எமது மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையிலான மிகப்பெரிய சதிநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெரும்போக நடவடிக்கை இடம்பெறுகின்ற போது எமது மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்கள் தங்களுடைய கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவைகள் உள்ளன. இது பல ஆண்டுகளாக அரசாங்க திட்டமிடல்களின் கீழ் இடம்பெறும் நடைமுறை.. இதனை இனவாத சக்திகள் காலத்திற்கு காலம் குழப்பும் செயற்பாடுகள் நடக்கின்றன.
இந்த விடயத்தில் அமைச்சரவை அனுமதியின் ஊடாக காணிகள் விடுவிப்பு மிக விரைவாக நடக்கும் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இப்போது பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டு செல்லும் இடத்தில் பலர் குடியமர்த்தப்பட்டு விவசாயம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை இந்தப் பிரதேசத்தில் இன முறுகலை ஏற்படுத்துவதற்காக சதித் திட்டமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
பாரிய நிலப்பரப்புகள் வேறு மாவட்டங்களில் உள்ள போதும், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் வேறு நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ள போதும், கால்நடைளை மேய்ச்சல் தரைகளில் விட இடமளிக்காமல் அவற்றை மறுப்பதன் மூலம் அங்கு பதற்றமான சூழலை கொண்டுவரும் செயற்பாடுகள் நடக்கின்றன. இந்த விடயத்தில் அரசாங்கம் மிக நிதானமாக, மிக கவனமாக, மிக வேகமாக தீர்வுகாண வேண்டும். ஜனாதிபதி கூறியது போன்றும், நீதிமன்ற உத்தரவுக்கமையவும் மேய்ச்சல் தரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பெரும்போகத்திலும் மாடுகள் மேய்ச்சல் தரைக்கு கொண்டு செல்லப்படாது விட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும். இதனால் மாவட்டத்தின் பொருளாதார அச்சாணியும் பாதிக்கப்படலாம். இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதாரத்தை சிதைக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அங்கு காணிகளில் அடாத்தாக விவசாயம் செய்பவர்களுக்கு உழவு இயந்திரங்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு முறுகல் நிலைமையை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். நாங்கள் இந்த விடயத்தில் பொறுமையை கையாண்ட போதும், அந்த மேய்ச்சல் தரைகளில் இருக்கும் மாடுகளை காயப்படுத்தும் மற்றும் சுடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இந்த விடயத்தில் பொறுப்புக் கூற வேண்டிய மகாவலி அதிகார சபை, மாவட்ட செயலகம், பொலிஸ் திணைக்களம் மற்றும் வனஇலாக திணைக்களம் என்பன தங்களின் விடயங்களை மறந்து பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதால் எமது மாவட்டத்தில் மிகப்பெரிய இன முறுகல் நிலை ஏற்படும் ஆபத்துள்ளது.
பண்ணையாளர்கள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலைமை ஏற்படுகின்ற போதும், அவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவு, ஜனாதிபதியின் ஆணை மற்றும் மற்றும் மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உள்ளன. இவற்றை மீறி எவ்வாறு நீதிக்கு புறம்பான வகையில், சட்டத்தை அவமதிக்கும் வகையில் அங்கு பலர் குடியமர்த்தப்பட்டு, பண்ணையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது.
இதனால் இந்த விடயத்தில் பொறுப்பான துறைசார் அமைச்சர், மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக விரைவான தீர்வை காணாவிட்டால் மிகப்பெரிய அனர்த்தம் மற்றும் மிகப்பெரிய இனமுறுகல் அல்லது மிகப்பெரிய மோதல் ஏற்படும் . நாங்கள் இன முறுகல் ஏற்படாத வகையில், அவ்வாறான மோதல்களை தடுத்து இணக்கப்பாட்டுடன் தீர்வு காண்பதற்கு முற்படும் போதும், கால்நடைகள் தாக்கப்படுவதும், பொலிஸாரால் பண்ணையாளர்கள் விரட்டப்படுவதும் மற்றும் மாவட்ட செயலகம் கண்டுகொள்ளாமல் இருக்கும் சூழலும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது . இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்.
கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகளே நாட்டில் ஏற்பட்ட மோசமான நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்றது. அங்கு அத்துமீறி குடியேறியவர்களுக்கு ஏற்கனவே காணி வழங்குவது தொடர்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள போதும், அவர்கள் இனவாத சக்திகளின் தூண்டுதல்களால் மேய்ச்சல் தரைகளில் குடியேறி நெருக்கடிகளை உருவாக்குகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்றார்.
![]()