இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சோமரத்னவிடம் சி.ஐ.டி. விசாரணைக்கு அனுமதி; யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியது

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கிருசாந்தி பாலியல் வல்லுறவு படு கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோதே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் செய்த விண்ணப்பத்துக்கமைய நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட, அதேவேளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

கிருசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலம் சம்பந்தமாக ஒரு விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கும், அவரிடமிருந்து வாய்மூலப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதற்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வழக்கின் பின்னணி

1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சிப்பாயான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் மீண்டும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டத்தரணிகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

1998ஆம் ஆண்டு கிருஷாந்தி படுகொலைவழக்கின் போது, செம்மணியில் கிருஷாந்தி மட்டுமன்றி, நூற்றுக்கணக்கான தமிழ் பொதுமக்கள் இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். மனிதப் புதைகுழிகள் எங்கு அமைந்திருக்கின்றன என்பதைத் தான் நேரில் சுட்டிக்காட்டத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.

சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில், கீழ்நிலைச் சிப்பாய்களான தாங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே உடல்களைப் புதைக்கும் வேலையைச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொலைகளில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் தளபதிகளும் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டதாகவும், தங்களைப் போன்ற கீழ்நிலைச் சிப்பாய்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, உண்மையான குற்றவாளிகளையும் திட்டமிட்ட அதிகாரிகளையும் கண்டறிய இவரது விசாரணை அவசியமாகிறது.

செம்மணிப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகளின் போது மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.சோமரத்ன ராஜபக்ச அன்று கூறிய தகவல்கள் உண்மையானவை என்பதை இந்த அகழ்வுகள் உறுதிப்படுத்துவதால், அகழ்வாராய்ச்சிப் பணிகளைச் சரியாக முன்னெடுக்கவும் கூடுதல் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களைத் துல்லியமாகக் கண்டறியவும் இவரது வாக்குமூலம் மிக முக்கியமானது என்றே இவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *