ஆட்சியைத் தக்க வைப்பதற்காக பயங்கரவாத நாடாக மாற்ற அரசு முயற்சி

நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கி, நாட்டை பயங்கரவாத நாடாக மாற்றி அதன்மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் எந்த விடயத்தையும் தெரியாமல் செய்யவில்லை. மிகவும் புத்தியுடன் சில விடயங்களை செய்கின்றனர். இந்த நாட்டில் ஜனநாயகத்தை இல்லாமல் செய்து, நாட்டில் சட்டவாட்சியை இல்லாமல் செய்து, இந்த நாட்டை அவர்களுக்கு தேவையானவாறு பயங்கரவாத நிலைக்குள் தள்ளி நாட்டை ஆட்சி செய்வதற்கே முயற்சிக்கின்றனர். அதற்கு தேவையான சூழலையே உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு செய்ய முடியுமென்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும் என்பதனை இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் கூறிக்கொள்கின்றோம்.
இலங்கை என்பது புண்ணிய பூமியாகும். நீங்கள் நினைப்பதை போன்று அதர்மத்தால் நிறைப்பதற்கு ஒருபோதும் உங்களுக்கு இடம் கிடைக்காது. நாங்கள் அதற்கு இடமளிக்கவும் மாட்டோம் என்பதனையும் இந்த அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கின்றோம்.
அரசாங்கம் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்காமல் அவற்றை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றது. முழுமையாக பொலிஸாரை முறையற்ற வகையில் பயன்படுத்தி எதிர்ப்புகளை தடுக்க முயற்சிக்கின்றது. அத்துடன் எந்தவொரு அரசாங்கம் செய்யாத வகையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் போது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி மக்களிடம் அதனை காண்பிக்க முயற்சிக்கின்றது. அரச அதிகாரத்தில் இருக்கும் எந்த கட்சியினாலும் தேவையான அளவுக்கு மக்களை கொண்டு வர முடியும். மூளைச் சலவை செய்யப்பட்ட, கீழ்மட்ட சிந்தனையுள்ளவர்களை பயன்படுத்தி கூட்டங்களையும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றது.
இந்த அரசாங்கத்திற்கு சில தேவைகள் உள்ளன. அதாவது நாட்டில் சட்டவாட்சியை வீழ்த்தி, இதனை பயங்கரவாத நாடாக மாற்றி, அந்த பயங்கரவாதத்தின் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். தேர்தலுக்கு போனால் வாக்குகள் மூன்று வீதத்திற்கும் கீழ் வந்துவிடும் என்பதனால் செயற்கையாகவே பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றது என்றார்.
![]()