இலங்கை

இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்

“தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்பும்போது அதனை குழப்புவதற்கும், மீண்டும் தலைதூக்குவதற்கும் பழைய இனவாத கும்பல் முற்படுகின்றது. ஆனால் இந்த இனவாத கும்பலுக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அந்த இனவாத கும்பலின் சூழ்ச்சிகளை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு ,

“எமது நாட்டில் 30 வருடங்கள் போர் இடம்பெற்றது. வடக்கிலும், தெற்கிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இனியும் அவ்வாறானதொரு யுகம் வேண்டாம். தேசிய சமத்துவம் மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட பழைய இனவாதக் கும்பலுக்கு ஜனநாயகம் பற்றியோ அல்லது பொருளாதாரம் பற்றியோ கதைக்க முடியாது. ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை, கல்வி பற்றியும் பேச முடியாது. ஏனெனில் மேற்படி துறைகளுக்கு அவர்கள் ஏற்படுத்திய அழிவு ஏராளம். இது நாட்டு மக்களுக்கு தெரியும்.

அதனால்தான் இனம் ஆபத்தில் எனக் கதறுகின்றனர்.
தேசிய சமத்துவத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தரப்பினர் இனவாதத்தை தோற்றுவிக்க முற்படுகின்றனர். வடக்கிலும் நிராகரிக்கப்பட்ட இனவாதக் கும்பல் உள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக வடக்கு, கிழக்கு , தெற்கு, மலையகம் என எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. தேசிய மக்கள் சக்திமீது மக்கள் நம்பிக்கை வைத்தனர். பாதுகாப்பான நாட்டையும், தமக்குரிய உரிமைகளையும் எதிர்பார்த்தனர். நாம் அவற்றை செய்வோம்.

அவ்வாறு செய்ய முற்படும்போது பழைய இனவாதக் கும்பல் தலைதூக்க முற்படுகின்றன. ஆனால் மக்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.” – என்றார் ஜனாதிபதி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *