இலங்கை

இராணுவத் தலைமையக காணி விற்பனை; 100 கோடி ரூபா இலஞ்சம் மகிந்தவும் சிக்குவாரா?

கொழும்பு காலி முகத்திடலில் அமைந்திருந்த இராணுவத் தலைமையகத்திற்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணியை, ஹொங்கொங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஷங்கிரிலா’ ஹோட்டல் வலையமைப்பிற்குக் கையளிக்கும் போது, 5 மில்லியனுக்கும் அதிக டொலர் (அக்கால மதிப்பின்படி 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான) இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவில் அமைப்புகளினால் ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் இதற்கு முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் திரட்டப்பட்ட சாட்சிக் கோப்புக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

இந்த முறைகேடு குறித்த தகவல்கள் முதன்முதலில், அன்றைய ராஜபக்ஷ ஆட்சியின் வெளிவிவகாரக் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சஜித் வாஸ் குணவர்தனவினால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்கள் மற்றும் சிங்கப்பூரின் நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவரால் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வழங்கப்பட்ட சத்தியப்பிரமாண வாக்குமூலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே வெளிவந்துள்ளது.

அன்றைய எப்சீஐடி பிரதானியும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான ரவி வைத்தியலங்கார உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் முன்னிலையில் சிங்கப்பூரில் வழங்கப்பட்ட அந்தச் சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் மூலம், இந்தத் பேரத்திற்குரிய தரகுப் பணம் கைமாறிய விதம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இலஞ்ச ஆணைக்குழுவின் வசம் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக, ஷங்கிரிலா நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட இந்த 5 மில்லியன் டொலர் இலஞ்ச பணம், நாட்டின் பிரசித்திப் பெற்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் ஊடாக பணச்சலவையில் ஈடுபடுத்தப்பட்டு, சட்டபூர்வமான பணமாக மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *