இலங்கை

ஞானசார தேரர் விடுவிக்கப்படுவாரா? சரியான நேரத்தில் ஜனாதிபதி சரியான முடிவெடுப்பார்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வது அல்லது அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது என்பது முற்றிலும் நீதித்துறை செயல்முறையுடன் பிணைக்கப்பட்ட ஒரு விடயமாகும் என்றும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையை மதித்து சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பார் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க மல்வத்து மற்றும் அஸ்கிரி விகாரைகளுக்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள போரட்டம் தொடர்பிலும் மற்றும் அரசாங்கத்தினால் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஏதேனும் யோசனை உள்ளதா எனவும் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் கூறுகையில்,

இதுவொரு நீதித்துறை செயல்முறை. நீதிமன்றமே இது தொடர்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, இந்த விடயத்தில் நாம் ஆலோசனைகளைப் பெறவேண்டியதும் நீதிமன்றத்திடமிருந்தே ஆகும். ஜனாதிபதி என்பவர் சரியான தீர்மானத்தை சரியான நேரத்தில் எடுப்பவர். அவர் நாட்டில் நிலவும் நிலைமை குறித்து சிறந்த புரிதலுடன் புத்திசாலித்தனமாகவே தீர்மானங்களை எடுக்கிறார். நாம் நீதித்துறையை மதிக்கிறோம், நமது நாட்டின் பாரம்பரியத்தை மதிக்கிறோம், அதே போல் அரசியலமைப்பையும் மதிக்கிறோம். அதற்கமையவே ஜனாதிபதி தற்போதும் தீர்மானங்களை எடுக்கிறார், எதிர்காலத்திலும் தீர்மானங்களை எடுப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *