இலங்கை

வட, கிழக்கில் 2 லட்சம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும்;  யாழில் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி. தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாகக் காணப்படும் பிரச்சினைகள், அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தடைகள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்  யாழ். சுண்டுக்குளியில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2012 ஆம் ஆண்டு புவியிடங்காட்டித் தொழில்நுட்பத்தைப் (ஜி.பி.எஸ்.) பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவற்றில் மருத்துவமனைகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தனியார் காணிகளும் உள்ளடங்கியுள்ளது.

இக் காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் ஓராண்டு கடந்தும் இறுதி அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. சில அதிகாரிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்புக் கிடைக்காததால் செயன்முறையை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆய்வுகள் நிறைவடைந்து விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட காணிகளைக் கூட இதுவரை விடுவிக்க முடியாத நிலை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அதன் ஒப்புதலுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளில் அடையாளம் காண வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாணப் பணிப்பாளர்கள், வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *