இலங்கை

அனோஜனுக்கு இரத்தக் காயத்தை ஏற்படுத்தினால் சொர்க்கத்திற்கு போக முடியுமெனத் தாக்கினார்களா?

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் மீது சிறைக்குள் மற்றைய கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி உரிய தலையீடுகளை செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அனோஜன் விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனோஜன் விவகாரத்தில் சவூதிக்கு செல்லவுள்ள தூதுக்குழு தொடர்பிலும்

அனோஜன் இருந்து சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது மாற்றப்பட்டுள்ள சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளே இருக்கின்றதாகவும், அங்கு அனோஜனுக்கு இரத்தக் காயத்தை ஏற்படுத்தினால் அவர்களுக்கு சொர்க்கத்திற்கு போக முடியும் என்று எவரோ கூறியுள்ளதால் அனோஜனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், ஏற்கனவே அவர் காயமடைந்துள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் அனோஜனின் தம்பி கூறியுள்ளார். இதனால் அவருக்கு சிறையில் பாதுகாப்புக்கு எவ்வாறான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், அவரின் விடுதலை தொடர்பில் பாராளுமன்ற குழுவொன்று சவூதி செல்லவுள்ளமை தொடர்பிலும் ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதன்போது பதிலளித்த அமைச்சர் கூறுகையில்,

ஜனாதிபதியினால் சவூதி மன்னருக்கு முன்வைக்கும் கோரிக்கையை பிரதி சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற குழுவினர் ஒப்படைக்கவுள்ளனர். அதற்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. அவை நடக்கின்றன. மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி ஊடாகவும் இராஜதந்திர ரீதியிலும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

தண்டனையை செயற்படுத்தும் அதிகாரம் சவூதி மன்னரிடமே உள்ளது. இதனால் அதனை பயன்படுத்தி இலங்கை இளைஞனுக்காக அந்த கோரிக்கையை அரசாங்கம் சார்பாக முன்வைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தலையீடுகளை செய்துள்ளது. நாங்கள் சட்டப்பூர்வமானஆலோசனைகளை ஒருபுறம் பெறுவதுடன், இராஜதந்திர ரீதியிலும் மற்றும் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் உள்ளன.

அதேபோன்று அனோஜன் தொடர்பான விடயங்களை நாங்கள் மிக கவனமாக கையாள வேண்டும். இது எமது நாட்டிற்குள் எமது நாட்டின் சட்டத்திற்குள் நடந்தது அல்ல. எமது நாட்டுக்கு வெளியே அந்த நாட்டின் சட்டத்திற்குள் நடந்துள்ளது. இதனால் தொலைபேசி அழைப்புகள் மூலம் இது தீர்க்கக்கூடியது அல்ல. இது மரண தண்டனை மற்றும் அவரை விடுதலை செய்வதற்கு இடையிலான பிரச்சினையாகும். இதனால் நாங்கள் கவனமாக இந்த விடயத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *