திலீபனின் சிலை, புலிகள் மீதான தடை; அர்ச்சுனாவின் கடும் எதிர்ப்பால் சிறீதரனின் உரையை நீக்க பணிப்பு

தியாக திலீபனின் சிலை அகற்றப்பட்டமை,அரசாங்கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகள் மற்றும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்தி அவசியம் தொடர்பில் சிறீதரன் எம்.பி சபையில் ஆற்றிய உரை , இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் என்பதனால் அந்த உரையை உடனடியாக ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு எம்.பி. அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியதனையடுத்து சிறீதரனின் குறித்த உரையில் விடுதலைப்புலிகள்,தொடர்பான விடயங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு சபாபீடத்திற்கு தலைமைதாங்கிய பொதுஜன பெரமுன எம்.பி. சானக மாதுகொட தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அந்நிய செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிறீதரன், உரையாற்றுகையில் தியாகதீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை ,அதனால் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு,கவலைகள், அரசாங்கத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீக்கத்தின் அவசியம் , நாட்டில் சமாதானம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மலரவேண்டுமென்றால் அரசாங்கம் செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை முன் வைத்து மிகவும் உணர்வு பூர்வமாக உரையாற்றினார்.
சிறீதரன் எம்.பி.யின் உரை முடிந்ததும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு எம்.பி.அர்ச்சுனா இராமநாதன் ,
இந்த பாராளுமன்றத்தில் இனங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுவது எமது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயற்படாகும். இவரின் இந்த உரை இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் எனவே தயவு செய்து இவரின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோருகின்றேன் என்றார்.
இதன்போது சபாபீடத்திற்கு தலைமைதாங்கிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்எம்.பி.யான சானக மாதுகொட கூறுகையில்,
இது தொடர்பில் நான் யோசனையை முன்வைத்தேன்.அவரின் உரையில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அவற்றை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு செயலாளர் குழுவை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
![]()