ரணிலின் வழக்கு விசாரணை நிறைவு; 11 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக நவம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு, நேற்று புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றபோது அரசாங்கப் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி சமதரி பியசேன நீதிமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, இவ்வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக வழக்குக் கோவையின் பிரதிகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இதன்காரணமாக, முறைப்பாட்டின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு எதிர்வரும் திகதியொன்றை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக வழக்கினை வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவானால் உத்தரவிட்டபட்டுள்ளது.
![]()