இலங்கை

ஹரிணிக்கு எதிரான குழு எம்மிடமில்லை;  ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா கூறுகிறார்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமைச் செயலகத்தை மையமாகக் கொண்டு உள்முகக் குழுவொன்று இயங்கி வருவதாக வெளியாகும் செய்திகளை “வேடிக்கையான நகைச்சுவை” என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நிராகரித்துள்ளார்.

‘சிலுமின’ பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “எதிர்க்கட்சியினர் அடிப்படை ஆதாரமற்ற பொய்களை நம்பிச் செயற்படுவது எமக்கே சாதகமானது.

இவ்வாறான பொய்யான செய்திகளை எவரும் நம்பப்போவதில்லை. இன்னும் பத்து வருடங்கள் கழிந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் பாரம்பரியக் கட்டமைப்புக்கும், ஹரிணி அமரசூரிய போன்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்திக்கும் (என்.பி.பி.) இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.

“ஜே.வி.பி.யையும் தேசிய மக்கள் சக்தியையும் பிரிக்க முடியாது. எமக்கிடையே கோடு போட்டுப் பிரிக்கும் வகையில் எந்தவொரு இடைவெளியும் இல்லை.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையே பரஸ்பர அன்பும் ஆழ்ந்த நம்பிக்கையும் காணப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் தங்கள் கட்சிகளில் உள்ள பிளவுகளை வைத்தே தேசிய மக்கள் சக்தியையும் மதிப்பிடுவதாகச் சாடிய தில்வின் சில்வா, தாம் அவர்களைப் போலச் செயற்பட்டிருந்தால் இந்தளவு தூரம் பயணித்திருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *