இலங்கை

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் மீதான அவதூறு – மன்னிப்புக் கோர உத்தரவிட்ட நீதிமன்று – தவணை கோரிய எதிராளி!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக, வி.ஜனகனினால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்குப் புறம்பான பதிவுகளுக்கு எதிராக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு 29.09.2026 (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகத் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த காணொளியை எதிர்மனுதாரரான ஜனகன் விநாயகமூர்த்தி நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையில் சமரசமான அணுகுமுறையை ஏற்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சைவ சமய அடையாளங்களைப் பள்ளி வளாகத்திலிருந்து அழித்து அகற்றுகின்றார். அவர் மத நம்பிக்கையற்றவர். பாடசாலையின் பாரம்பரியத்தை நிராகரிக்கின்றார்” என்று குற்றம்சாட்டி ஜனகன் விநாயகமூர்த்தியினால் முகநூலில் காணொளியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இக்காணொளியை உடனடியாக நீக்குமாறும், இது தொடர்பாக அதிபரிடம் மன்னிப்புக் கோருமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற காணொளிகளை வெளியிடமாட்டேன் என உத்தரவாதம் அளிக்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிபந்தனைக் கட்டளை பிறப்பித்திருந்தது.

29.09.2026 அன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் நேரில் முன்னிலையான ஜனகன் விநாயகமூர்த்தி, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி அக்காணொளியை ஏற்கனவே நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், காரணங்காட்டுவதற்காக அவகாசம் கோரிய அவர், அதிபரிடம் மன்னிப்புக் கோருவது உள்ளிட்ட விடயங்களில் இரு தரப்பும் ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இரு தரப்பின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிவான், சமரச முயற்சியை மேற்கொள்வதற்காக வழக்கை ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் சார்பாக மூத்த சட்டத்தரணிகளான வி.திருக்குமரன், கலாநிதி கு.குருபரன் ஆகியோருடன் மேலும் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

வி.ஜனகன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, என்.கே.அசோக்பரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *