இலங்கை

தியாக தீபத்துக்காக இன்று முதல் அணையா விளக்குப் போராட்டம்

தியாக தீபம் திலீபனுக்காக இன்று(30.09.2026) முதல் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை யாழ். நல்லூரில் ‘அணையா விளக்குப் போராட்டம்’ முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலையைப் பொலிஸார் அகற்றிச் சென்றதைக் கண்டித்தும், அதனை மீள அவ்விடத்திலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

சிலையைப் பொலிஸார் அகற்றியதைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் நினைவேந்தல் குழுவினராலும், திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்று(29.09.2026) செவ்வாய்க்கிழமையும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நினைவாலயம் முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அகற்றப்பட்ட சிலையை மீள அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இன்று புதன்கிழமை முதல் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை யாழ். நல்லூரில் ‘அணையா விளக்குப் போராட்டம்’ முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு நல்லூரில் உள்ள திலீபனின் நினைவாலயம் முன்பாக விளக்கேற்றப்பட்டு, நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரை அந்த விளக்கை அணைக்காமல் இரவு பகலாகத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *