இலங்கை

நாமலின் இலஞ்ச விவகாரம்: நீதிமன்றில் மீண்டும் அடிபட்ட மகிந்த – நாமல் – பசில் பெயர்கள்!

100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ஏர்பஸ் (Airbus) பரிவர்த்தனை மற்றும் 70 மில்லியன் ரூபாய் பெற்றதாகக் கூறப்படும் கிரிஷ் (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஏர்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 13ஆம் திகதி வரையும், கிரிஷ் வழக்கில் எதிர்வரும் 6ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

கிரிஷ் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட பணம், பணச்சலவை மூலம் பெறப்பட்ட பணம் என இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், நிமல் பெரேரா என்பவர் ஊடாக இரண்டு சந்தர்ப்பங்களில் தலா 35 மில்லியன் ரூபாய் வீதம் நாமல் பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் சந்தேகநபரின் வாக்குமூலத்தின் மூலமும் தெரியவந்துள்ளதாகவும், அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

குறித்த காணி தொடர்பான நடவடிக்கைகளில் அரச நிறுவனங்கள் மிக வேகமாக செயற்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் பணிப்பாளர் சபை அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த கட்டிடத் திட்டத்துக்காக சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த காணியில் இலங்கை மத்திய வங்கி முதலீடு செய்திருந்த நிலையில், அதனை நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கிரிஷ் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு அதிகாரி தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச பதவி வகித்ததாகவும், நகர அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாகவும், நாட்டின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி வகித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டே புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சந்தேகநபர் தொடர்பில் சான்றிதழை வழங்கியுள்ளதாகவும், குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *