இலங்கை

கிரிஷ் வழக்கிலும் சந்தேக நபராக நாமலின் பெயர்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி நிறுவனமான ‘கிரிஷ்’ நிறுவனத்துடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இலஞ்ச ஆணைக்குழுவினால் சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட அனுமதிக்கமைய, நாமல் ராஜபக்‌ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் அந்த கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சம் பெற்றமை தொடர்பான இருவேறு வழக்குகள் இரண்டில் நாமல் ராஜபக்‌ஷ சந்தேக நபராக பெயரிடப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் அண்மையில் சிறைச்சாலைக்கு சென்று அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணி ஒன்றை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிரிவர்தன இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *