இலங்கை

சட்டவிரோத விகாரைகளுக்கு ஒரு நீதி, திலீபன் சிலைக்கு ஒரு நீதியா? ;   மாவட்டங்களிலும் மக்கள் திரண்டு போராட்டம்!

யாழ்ப்பாணம்,நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது வெண்கல சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும் திலீபனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் நேற்று திங்கட்கிழமை பெரும்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

யாழ்ப்பாணம் -நல்லூரில் உள்ள தியாகி திலீபன்நினைவாலயம் முன்பாக நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மாபெரும் கண்டனப் போராட்டம்முன்னெடுக்கப்பட்டது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கண்டன வாசகங்கள்எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக “தியாகி திலீபன் தமிழினத்தின் அடையாளம்” ‘‘மக்கள்புரட்சி வெடிக்கட்டும் – பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்” ‘‘இனப்படுகொலை புரிந்த இராணுவத்துக்குச் சிலை; தமிழினத்தின் தியாகிக்குச்சிலை இல்லையா?” ‘‘தியாகி திலீபனின் சிலையை உடனே மீளநிறுவு” ‘‘தலைமுறை கடந்தும் என்றும் வரலாறாய் வாழ்பவன் திலீபன்”, ‘‘அநுர அரசே உன்னுடைய இரட்டைவேடம் அம்பலம்”என்பன உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பி அவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர் .

யாழ். நல்லூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பிலும் பாரிய போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், காந்தி பூங்கா வளாகத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், பொலிஸாரின் செயலைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான, சிறீநேசன், ஸ்ரீநாத் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று திருகோணமலை சிவன் கோவிலடியிலும், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்திலும் மன்னார் தந்தை செல்வா நினைவுத் தூபியடியிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன .அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தையில் தொடங்கி மணிக்கூட்டுக் கோபுரம் வரை பேரணியும் வவுனியாவில் பொங்குதமிழ் நினைவுத் தூபி அடியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டங்களில் மதகுருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்றப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தியாகதீபம் திலீபனது உருவச்சிலையை பொலிஸார் அகற்றியமைக்கு போராட்டத்தில் வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைகள், புத்தர் சிலைகள் மற்றும் போர் நினைவுச் சின்னங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அகிம்சை வழி போராடி உயிர்நீத்த திலீபனின் சிலை அகற்றப்பட்டிருப்பது சட்டத்தின் சமத்துவமான நடைமுறை குறித்தும் இப்போராட்டங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *