திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயத்தில் தமிழ் அரசுக் கட்சி மீது திட்டமிட்ட சேறுபூசல்

தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மீது திட்டமிட்ட சேறுபூசல்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டை மறுக்கின்ற அதேநேரத்தில் அவர்களின் இரட்டை வேடங்களையும் அம்பலப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ் மாநகர சபையில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பநாளில் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் திலீபன் நினைவாலயத்தில் சிலை வைக்க கடிதம் மூலமாக அனுமதி கோரியிருந்தார். அந்த அனுமதி கோரிக்கையை கூட ஏற்கனவே சிலையை அங்கு வைத்துவிட்டு தான் வந்து கேட்டிருந்தார். இருந்த போதிலும் தமிழ் மக்களின் உணர்வுசார்ந்த விடயமென்பதால் அதனை பொருட்படுத்தாமல் கட்சியிடம் கதைத்துவிட்டு அனுமதி வழங்கியிருந்தோம்.
அந்த கோரிக்கை கடிதத்தில் கூட தற்காலிகமாக 26 ஆம் திகதி வரை சிலை வைப்பதற்கென்றே அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இருந்தும் சபையின் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரதும் ஆதரவுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இதன் பின்னர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் எங்களிடமும் வந்து சில விடயங்களை கேட்டறிந்திருந்தனர். அதே போன்று சபையின் அனுமதி கோரி கடிதம் வழங்கிய உறுப்பினரிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் தியாக தீபத்தின் நினைவாலயத்தில் 39 ஆவது வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் சபை உறுப்பினர் தற்காலிகமென கோரிய அனுமதி 26 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள விடயம் குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அந்த விடயத்தை பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த பொலிஸார் சிலையை அகற்றிச் சென்றிருக்கின்றனர்.
உண்மையில் இந்தச் சிலை அகற்றும் விடயம் குறித்து பொலிஸார் எங்களுக்கு எதுவும் தெரிவிக்கவும் இல்லை. சிலையை அகற்றுங்கள் என பொலிஸாரிடம் நாங்கள் கோரவும் இல்லை.இருந்த போதிலும் காலையில் திடிரென அங்கு சென்ற பொலிஸார் சிலையை எடுத்துச் சென்றுள்ளனர். ஈழத் தமிழ் மக்களுக்காக தன்னுயிரையே தியாகம் செய்த தியாகியின் சிலையை பொலிஸார் எடுத்துச் சென்றமை எங்களுக்கும் மிக மனவருத்தத்தையே ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாறான நிலையில் சிலை அகற்றுவதற்கு நாங்களும் எங்களுடைய கட்சியும் துணை போயுள்ளதாக சேறுபூசுகின்ற வகையில் ஊடகங்கள் முன்பாக தெரிவித்திருக்கின்றனர்
அவர்களின் அரசியல் நோக்க குற்றச்சாட்டுக்களையும் சேறுபூசல்களையும் நாங்கள் அடியோடு நிராகரிக்கிறோம். எங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்க முன்னதாக இந்த விடயத்தில் தாங்கள் எப்படி நடந்து கொண்டனர் என்பதை பரிசீலித்து பார்க்க வேண்டும்.
தங்கள் மீது உள்ள தவறை மறைப்பதற்காக எங்களைக் குற்றஞ்சாட்டி தங்களை புனிதர்களாக்கி கொள்ளும் அரசியலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
![]()