பொலிஸாரின் செயலுக்கு எதிராக வடகிழக்கு எங்கும் இன்று போராட்டம்

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி பொலிஸாரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எட்டு மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரடியிலும், திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோவிலடியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவிலடியிலிருந்து கச்சேரி வரையும், அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் மத்திய சந்தையடியில் ஆரம்பித்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரையும், மன்னார் மாவட்டத்தில் தந்தை செல்வா நினைவுத்தூபியடியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி பூங்காவிடத்திலும், வவுனியா மாவட்டத்தில் பொங்குதமிழ் நினைவுத் தூபியடியிலிருந்து பழைய பேரூந்து நிலையம் வரையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் சந்தியிலும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் வடக்கு கிழக்கு உப தலைவியும் மட்டக்களப்பு மாவட்டத் தலைவியுமான அமலராஜ் அமலநாயகி அறிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
நல்லூர் பகுதியில் தமிழ் மக்களால் புனிதமாகப் பூஜிக்கப்பட்டு, நேற்றைய தினம்(சனிக்கிழமை)அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை, இன்று(நேற்று)அதிகாலை பொலிஸார் அடாவடித்தனமாக அகற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
தமிழ் மக்களின் அடையாளங்களையும் நினைவுகூரும் உரிமைகளையும் திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசாங்கங்களின் இனவாதப் போக்கையே இது மீண்டும் நிரூபித்துள்ளது.
தென்னிலங்கை இனவாத சக்திகளைத் திருப்திப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறான கோர முகத்தை இந்த அரசும் காட்டுகின்றது.
வடக்கு கிழக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் சிலைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார், அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த திலீபனின் சிலையை அகற்றியிருப்பது, இந்நாட்டில் இருவேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளதையே காட்டுகிறது.
இதனைக் கண்டித்து, திங்கட்கிழமை(இன்று)பிற்பகல் 2.30 மணியளவில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது.
ஆகவே இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
![]()