வவுனியா வெடுக்குநாறி மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபாடு!; பெருமளவான பௌத்தர்கள் வருகை

வவுனியா வெடுக்குநாறிமலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை புத்தரின் சிலையை வைத்து பௌத்த பிக்கு தலைமையில் விசேட பௌர்ணமி தின வழிபாடுகள் இடம்பெற்றது. வழிபாட்டின் பின்னர் சிலை மீண்டும் எடுத்துச்செல்லப்பட்டது.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சனிக்கிழமை வடக்குமாகாண தலைமை தேரர் சந்தபோதி தலைமையில் பௌர்ணமி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சைவமக்கள் சனிக்கிழமை புரட்டாதிச் சனி விசேட பூஜை வழிபாடுகளில் அங்கு ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை செய்திருந்தனர்.
இரண்டு தரப்பும் வழிபடலாம் என்ற உத்தவை நீதிமன்றம் ஏற்கனவே விடுத்திருந்தது.
அந்தவகையில் சைவமக்கள் காலை 6 மணியளவில் ஆலயத்திற்கு விஜயம் செய்து தமது வழிபாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன் கல்கமுவே சந்தபோதி தேரர் தலைமையிலான பௌத்த மக்களும் காலை 9 மணிக்கு பின்னர் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் அங்கு சென்றனர்.
தேரருடன் வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெருமளவான சிங்கள மக்கள் ஆலய பகுதிக்கு வந்தனர்.பௌத்ததேரர் புத்தரின் சிலை ஒன்றை எடுத்துவந்ததுடன், அதனை மலையடிவாரத்தில் வைத்து விசேட பிரித் ஓதல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அவை நிறைவடைந்ததும் புத்தர் சிலையை மீண்டும் எடுத்துச்சென்றனர்.
சனிக்கிழமை வெடுக்குநாறி மலையை சுற்றி நூற்றுக்கணக்கான பொலிசார்,விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். மலை அடிவாரம் முழுவதும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மத ரீதியில் பதற்றம் ஏற்படுவதற்கான நிலமை அங்கு அவதானிக்க முடிந்தது. எனினும் பெரியளவிலான குழப்பநிலை ஏற்படவில்லை.
இதன போது பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறிதரன் முன்னாள் எம்.பி. செ.கஜேந்திரன், மற்றும் பொதுமக்கள் சிவ வழிபாடுகளில் பங்கெடுத்திருந்தனர்.
![]()