இலங்கை

தியாக தீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், அவர் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு ஆரம்பமானது.

இந்த நிகழ்வின் போது மாவீரர்களான அன்புக்குமாரன் மற்றும் தம்பமணி ஆகியோரின் பெற்றோர்களான அருணாச்சலம் வல்லிபுரம் மற்றும் வல்லிபுரம் செல்வராணி ஆகியோர் இணைந்து ஈகைச்சுடரை ஏற்றி வைத்தனர்.

தியாக தீபம் உண்ணாநோன்பிருந்த நல்லூர் ஆலய வீதியில், மாவீரர்களின் சகோதரியும் போராளியுமான சுப்பிரமணியம் மலர்விழி மற்றும் மாவீரர் செல்லக்கண், இசைச்செல்வன் குடும்பத்தினர் இணைந்து ஈகைச்சுடரை ஏற்றினர்.

அதனைத் தொடர்ந்து நினைவாலயத்தில் உள்ள தியாக தீபத்தின் திருவுருவச் சிலைக்கு மாவீரர் அறிவின் தந்தையான மூத்த போராளி முத்துக்குமார் மனோகர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பலரும் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இறுதி நாள் நிகழ்வான இன்று, இளைஞர் ஒருவர் தூக்குக்காவடி எடுத்தவாறு தியாக தீபத்தின் நினைவிடத்துக்கு வந்து தனது அஞ்சலியைச் செலுத்தினார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்தும் திலீபனின் திருவுருவப்படங்கள் தாங்கிய நினைவு ஊர்திகள் நல்லூரில் அமைந்துள்ள நினைவாலயத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *