இலங்கை

22ஆவது திருத்தம் அமுலாகினால் தமிழர் உரிமைகளுக்கு ஆபத்தாகவே இருக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் ஆபத்து ; தமிழ் மக்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது?

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தமானது அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்ககள் உள்ளிட்ட விடயங்களுக்கு மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலேயே அமையலாம் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

நீதி என்பது சுந்திரமானது தலையீடு அற்றது என்பது கிரேக்கத்தில் இருந்து உருவானது. ஆனால் சுதந்திரமானதும் தலையீடு அற்றதுமான நீதி இலங்கையில் பின்பற்றப்படுகின்றதா? இது தொடர்பில் சற்று பின்னோக்கி பார்த்தால் இலங்கை நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்தது. தமிழர்களில் வரலாற்று அடிப்படைகளை எவ்வாறு இந்த நீதித்துறை தனது இசைந்த வழிக்கு மாற்றியமைத்துள்ளது என்பதற்கு கடந்தகால ஆட்சியாளர்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

1954ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் அல்லைக்கந்தளாயில் 154 விவசாயிகள் பொலிஸார் பார்த்திருக்க சிங்கள காடையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் படுகொலை செய்யப்படும் போது இந்த நீதித்துறை என்ன செய்தது. அன்று அதற்கு நீதியை கண்டிருந்தால் இன்று இந்த நாட்டில் முள்ளிவாய்க்கால் நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. அதேபோன்று 1983இல் மலையகத்தில் வன்முறை மூலம் தமிழர்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது இலங்கை நீதித்துறை என்ன செய்தது. கொழும்பில் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்ட போது நீதித்துறை என்ன செய்தது. 1983இல் வெலிக்கடை சிறைச்சாலையில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட போது, திருகோணமலையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டனர் இது தொடர்பில் நீதித்துறை என்ன செய்தது.

இதேவேளை 2009இல் பிரான்ஸிஸ் அடிகளாரின் கண்கண்ட சாட்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். எத்தனையோ கணவன்மார் மனைவிகளால் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான கண்கண்ட சாட்சியங்கள் உள்ளன. ஆனால் நீதித்துறையால் இவர்களை காட்ட முடியவில்லை.நீதித்துறை எப்போதும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது. தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளதா என்ற கேள்விகள் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டில் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. நீதித்துறையினால் இதற்கு எதனையும் செய்ய முடியவில்லை. எத்தனை ஆயிரம் பேரை இந்த சட்டம் இல்லாமல் செய்துள்ளது. நீதித்துறையால் என்ன நடந்தது. என்ன செய்ய முடிந்தது என்பது எங்கள் மத்தியில் இருக்கும் கேள்வி இருக்கின்றது.

இதேவேளை நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் போது ஏன் இன்னும் ஏனைய துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கவில்லை. ஏன் அதற்கு அரசாங்கம் தயங்குகின்றது. இந்த விடயத்தில் அரசுக்கு ஏதோவொரு தேவையுள்ளது. இதற்காகவே நீதித்துறையில் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

உலகத்தில் நீதித்துறை சுதந்திரமானதாக உள்ள போதும் இலங்கையில் நீதித்துறை சுதந்திரமாக இருக்கின்றதா என்ற கேள்விகள் எழுகின்றன. குரூந்தூர் மலைக்கொரு நீதி, வெடுக்குநாரி மலைக்கொரு நீதி, கண்ணீயா வெந்நீர் ஊற்றுக்கு ஒரு நீதி, நாட்டில் ஏனைய இனங்களுக்கான நீதி என்றுதான் இருக்கின்றது. இதனால் இந்த சட்டத்தை யாருக்காக நீங்கள் கொண்டுவருகின்றீர்கள். மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் இவற்றை தாண்டி ஏன் இந்த அரசாங்கம் ஒரு கரும்புள்ளியாக 22ஆவது திருத்தத்தை கொண்டு வருகின்றது. இதற்கு பின்னால் என்ன இருக்கின்றது.

நிறுவனங்களின் சுயாதீனம், நீதித்துறை பாதுகாப்பு, அதிகார பரவலாக்கம், அடிப்படை உரிமைகள், சட்ட உத்தரவாதம் இவை இல்லாத நாட்டில் எவ்வாறு திருத்தத்தின் ஊடாக இந்த நடைமுறையை கொண்டுவர முடியும். இலங்கை தமிழரசுக் கட்சியாகிய நாங்கள் இதனை எதிர்க்கின்றோம். இந்த நாட்டில் தொடர்ந்தும் தமிழருக்கு அநீதி நடந்துள்ளது. வெடுக்குநாறிமலையில் கலவரத்தை தூண்டுவதற்கு பிக்குகள் தலைமையில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கெல்லாம் நீதி என்ன செய்கின்றது.

எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்ககள் தொடர்பில் 22ஆவது திருத்தம் இன்னும் பல நெருக்கடிகளை தரலாம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *