இலங்கை

22 ஆவது திருத்தத்துக்கு ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் இருந்தது; அமைச்சர் பிமல் தெரிவிப்பு

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிறந்த கலந்துரையாடல்கள் ஊடாக அந்த நெருக்கடிக்கு தீர்வு கண்டோம். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தனர் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்து அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. மக்கள் வழங்கியுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் 2029 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு போதும். அதற்கு பின்னர் தேர்தலின்போது மக்களே தீர்மானிக்க வேண்டும்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தனர். 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 20 ஆவது திருத்தம் ஆட்சியாளர்களின் நோக்கத்துக்காகவே கொண்டு வரப்பட்டன. ஆனால் 22 ஆவது திருத்தம் ஜனாதிபதியினதோ அல்லது அரசாங்கத்தினதோ அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காக கொண்டு வரப்படவில்லை. நீதிமன்ற கட்டமைப்பை மறுசீரமைப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இது எவ்வாறு அரசியல்மயமாக்கலாகும்?

18 ஆவது,20 ஆவது அரசியலமைப்புத்திருத்தங்களுக்கு ஆதரவாக கையுயர்த்தியவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் உள்ளார்கள்.இவர்கள் தான் நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

ராஜபக்சக்களுக்கு எதிராக 2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவை அரசியல் நோக்கத்துக்காக அல்ல, 2019 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக இந்த வழக்குகள் மீளப்பெறப்பட்டன. இவை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் ஏன் பேசவில்லை? நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எவருக்கு எதிராகவும் புதிதாக வழக்குத் தாக்கல் செய்யவில்லை. கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் முறையான விசாரிக்கப்பட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாக அமையும்?

நீதித்துறை சுதந்திரம் பற்றி இன்று குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் நீதித்துறைக்கு அப்பாற்பட்டே செயற்பட்டார்கள். சாதாரண மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்காகவே 22 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சிறந்த கலந்துரையாடல்கள் ஊடாக அந்த நெருக்கடிக்கு தீர்வு கண்டோம். இதன்மூலம் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *