பலதும் பத்தும்

ஜப்பானின் E10 ரயிலுக்கு இணையாக அதிவேக புல்லட் ரயிலை உருவாக்கும் இந்தியா

இந்திய ரயில் போக்குவரத்து வரலாற்றில் புதிய அத்தியாயமாக, மணிக்கு 350 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய ‘பி35’ என்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயிலை 2030-ஆம் ஆண்டுக்குள் உருவாக்க இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜப்பானின் அடுத்த தலைமுறை ரயிலான ‘இ10’ தொடருக்கு இணையான தொழில் நுட்பத்துடன் இந்த இந்திய புல்லட் ரயில் உருவாக்கப்படவுள்ளது. மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் மாற்றியமைக்கப்பட்ட திட்டச் செலவுக்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தபோது இந்த விவரங்கள் உத்தியோகபூர்வமாக பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

மணிக்கு 350 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய ‘பி35’ ரயில்களை தயாரிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தனது பழைய இ5 ரயில்களின் உற்பத்தியைப் படிப்படியாக நிறுத்தி வருகிறது. அதன் புதிய ‘இ10’ ரயில்களின் உற்பத்தி 2030-ல் ஆரம்பித்து, 2034-க்குள் இயக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் ‘சி.டி.சி.எஸ்’ சிக்னலிங் முறைக்கு இணையாக, இந்தியா தனது சொந்த ‘பாரத் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பை’ உருவாக்கும். இது ரயில்களின் வேகம் மற்றும் தூரத்தைக் கண்காணித்துப் பாதுகாப்பை உறுதி செய்யும்.

508 கிலோ மீற்றர் நீளம் கொண்ட மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் பாதை திட்டம் முழுமையாக டிசம்பர் 2030-க்குள் நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய ரயில்கள் வருவதற்கு முன்பாக, இந்த அதிவேகப் பாதையில் முதற்கட்டமாக ‘பி28’ ரயில்கள் இயக்கப்படும். பி28 ரயில்களின் வடிவமைப்பு வேகம் மணிக்கு 280 கிலோ மீற்றராகவும் இயங்கும் வேகம் மணிக்கு 249 கிலோ மீற்றராகவும் இருக்கும். பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (BEML) 32, பி28 ரயில்களைத் தயாரிக்க ஒப்பந்தம் பெற்றுள்ளது.

இதற்கான 2 முன்மாதிரி ரயில்கள் 2027 முதல் காலாண்டிற்குள் சோதனை ஓட்டத்திற்குத் தயாராகிவிடும். கூடுதலாக 15, பி28 ரயில்களைத் தயாரிக்க பி.இ.எம்.எல் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 5,400 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *