புலம்பெயர்ந்தோரின் வாரிசுகளிடம் எதனையும் எதிர்பார்க்கலாமா?… நியூசிலாந்து சிற்சபேசன்


பூமிப்பந்தெங்கும் காலாதிகாலமாகவே புலம்பெயர்வுகள் நடைபெறுகின்றன. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, மொரிஷியஸ், மலேயா போன்ற பல்வேறு நாடுகளும் புலம்பெயர்வுகளினால் வளமடைந்திருக்கின்றன. உலகின் மொத்த சனத்தொகையில், அண்ணளவாக நான்கு விழுக்காடு வரையானோர், 2024ம் ஆண்டிலே, புலம்பெயர்ந்ததாக தரவுகள் சொல்கின்றன. ஆக, புலம்பெயர்வு இயல்பானதாகும்.
ஆனால், இலங்கையின் புலம்பெயர்வு அனுபவம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். அதிலே மலேயப் புலம்பெயர்வு ஒன்றாகும். அஃது எண்ணிகையில் பாரியதல்ல. இனக்கலவரங்களின் விளைவாக, 1980களில் ஏற்பட்ட புலம்பெயர்வு எண்ணிக்கையில் பாரியதாகும். அதுவே, புலம்பெயர்ந்தோர் என்னும் ஒரு தரப்பை உருவாக்கியதாகும்.
அவ்வாறு புலம்பெயர்ந்தோர், ஆரம்பகாலங்களில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தாயகத்துடனான நேரடித் தொடர்பாடலைக் கொண்டிருந்தனர். அதற்கு, இலங்கையினுடைய புறச்சூழலும் காரணமாகியது. 2009 திருப்புமுனையாகியது. அதனைத்தொடர்ந்து, புலம்பெயர்ந்தோரின் தாயக வருகை “அணையுடைத்த வெள்ளம்போல” சடுதியாக அதிகரித்தது. அதுவே சவாலாகியது. புலம்பெயர்ந்தோரும் தாயகத்தோரும் திக்குமுக்காடினார்கள்.

விலகி அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நேரடித் தொடர்பாடலை மட்டுமே, அதிகளவிலான காலப்பகுதிக்குக் கொண்டிருந்த தரப்புக்களினால், ஒன்றுசேரக்கூடிய புள்ளியைக் கண்டடைவது சாத்தியமற்றதாகியிருந்தது.
தாயகத்திலே விட்டுச்சென்ற காலகட்டத்தைப் புலம்பெயர்ந்தோர் தேடினர். ஆனால், தாயகத்தின் வாழ்வுமுறை மாற்றமடைந்திருந்தது. அதற்கான காரணகாரியங்களைத் தேடுவது அர்த்தமற்றதாகும். ஏனெனில், மாற்றம் என்பது இயல்பானது மட்டுமல்ல. தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால், அவைதொடர்பிலே, யதார்த்தமான பிரக்ஞை யாரிடமுமே இருக்கவில்லை. நேசமான உரையாடல்களும் நடைபெறவில்லை.
மாறாக, “தாம் பிடித்த முயலுக்கு மூன்றுகால்” என நம்புவதே வாடிக்கையாகியது. தம்முடைய புள்ளிக்கே, அடுத்தவர் வரவேண்டும் என்னும் எதிர்பார்ப்பே வளர்ச்சியடைந்தது. அதனால், ஒருவரோடுவர் இணைந்துகொள்ளத் திணறினர். அதுவே தொடர்கதையாகியது.
பொருளாதாரப்பலத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றனர். கூட்டுணர்வுடன் இயங்க மறுக்கின்றனர். அரவணைத்துச் செயற்படுவதைத் தவிர்க்கின்றனர். வழிகாட்டிகள் இல்லை என்பது மட்டுமல்ல, வாழிகாட்டிகளை ஏற்றுக்கொள்வதுமில்லை. “தடி எடுத்தவன் தண்டல்காரன்” என்னும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால், இருதரப்பாரிடமுமே விரிசல்களே அதிகரிக்கின்றன. விளைவு: “திருவிழாவில் தொலைந்த குழந்தை” போன்று பதகளிக்கும் சமூகமாகிவிட்டது.
புலம்பெயர்ந்த சூழலிலே, தம்முடைய வாரிசுகளுடனும் “ஆத்மார்த்தமாகத்” திரண்டுகொள்வதிலேயும் புலம்பெயர்ந்தோர் திணறுகின்றனர். ஆனால், அதனை யாருமே வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதில்லை.
அதனை விளங்கிக்கொள்ள, மலேயாவில் குடியேறிய தலைமுறையினரின் “மூக்குப்பேணிக்” கலாசாரத்தைச் சொல்லலாம். இலங்கையிலிலேயிருந்து காவிச்சென்ற “மூக்குப்பேணி” பழக்கத்தை முதல்தலைமுறை இறுகப்பற்றிக் கொண்டிருந்தது. ஆனால், அவர்களுடைய வாரிசுகள் அதனைப் பின்பற்றவில்லை என்பது மட்டுமல்ல, தாயகத்திலேயும் “மூக்குப்பேணி” காணாமல்போயிருந்தது.
ஆக, புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையினரின் நிலை, “அங்கும் இல்லை; இங்கும் இல்லை” போன்றதென்றும் சொல்லலாம். தாயகத்திலும் ஒட்ட முடியவில்லை. தம்முடைய வாரிசுகளுடனும் “ஒரே அலைவரிசையில்” இயங்கவும் முடியவில்லை.
அதேவேளையில், தனிப்பட்ட வாழ்வில் உச்சம் தொடுகின்றனர். கல்வி, தொழில், வசதிவாய்ப்புகளிலே பிரகாசிக்கின்றனர்.

அதனால், அவர்களுடைய வாரிசுகளின் வளர்ச்சி வேகமெடுப்பது இயல்பானதாகின்றது. கல்வி, பொறியியல், மருத்துவம், சட்டம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் உச்சம் தொடுகின்றனர்.
அதிலும் குறிப்பாக, அரசியல் ரீதியான பாய்ச்சல் அதிகரிக்கின்றது. உள்ளூராட்சி, பாராளுமன்றம் என பல்வேறு மட்டங்களிலும் தமிழ் பெயர்களைக் காணமுடிகின்றது. அமைச்சுப் பொறுப்புக்களையும் பெறுகின்றனர்.
இவ்வாறான, அரசியல் ரீதியான எழுச்சி பரவலான கவனத்தை ஈர்க்கின்றது. அவ்வாறாக மேலெழுகின்ற அரசியல்வாதிகள், தாயகப் பிரச்சினை தொடர்பில் கவனம் கொள்ளவேண்டும் என்னும் எதிர்பார்ப்பும் பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதனைப் புரிந்துகொள்ளவும் முடிகின்றது.
முள்ளிவாய்காலுக்குப் பின்னரான, ஈரெட்டு ஆண்டுகாலத்திலே ஆரோக்கியமான மாற்றங்களைக் காணமுடியவில்லை. ஆட்சிமாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஆட்சிமுறையில் மாற்றம் ஏற்படவில்லை. காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல்கைதிகள் போன்ற விடயங்கள் கோஷங்களாகவே ஆகிவிட்டன. அரசியல்யாப்புத் திருத்தம், புதிய அரசியல்யாப்பு, 13வது திருத்தம், மாகாணசபை முறைமை, நிலைமாறுகால நீதி போன்ற “வக்கணையான” பேச்சுக்களுக்கு மட்டும் பஞ்சமில்லை.
இனப்பிரச்சினை தொடர்பில் தென்னிலங்கை நியாயமாகச் செயற்பட்டதுமில்லை. செயற்படப்போவதுமில்லை என்பதே வரலாற்றுப் படிப்பினையாகும்.
இந்தியாவின் அழுத்தத்தினாலேயே ஓரளவேனும் “சாண்” ஏறியது.
ஆக, வெளியிலிருந்து வரக்கூடிய அழுத்தத்தினால் மட்டுமே தென்னிலங்கையை அசைக்கமுடியும் என்பதே பாடமாகும்.
அந்தவகையிலே, சர்வதேசக் கவனத்தை திரட்டக்கூடிய இடத்திலே புலம்பெயந்தோர் உள்ளனர். அதிலும் குறிப்பாக, மேற்கத்தைய தலைநகரங்களிலே, புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் கவனிக்கப்படக்கூடிய பதவிநிலைகளை எட்டிப்பிடிக்கின்றனர். அஃது, “திசைதவறிய கப்பலுக்கு கிடைத்த துருப்புச் சீட்டு” போன்றதாகும்.
ஆனால், புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் பெயரளவிலேயே தமிழர்களாக உள்ளனர். உணர்வளவில் வெவ்வேறு தேசத்தவர்களேயாகும் என்னும் யதார்த்தம் கவனிக்கப்படுவதில்லை.
தமிழ் நிகழ்ச்சிகளில் வேட்டி சேலை அணிவதும், தமிழ் பெருமை பேசுவதும் “உள்ளூர் தமிழ் வாக்காளர்களைத்” திருப்திப்படுத்தவே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
வாக்களித்து தெரிவுசெய்கின்ற மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதே அரசியல்வாதியொருவரின் பணியாகும். கூடவே, கட்சிக் கட்டுப்பாடுகட்கு உட்பட்டு, தேசத்தின் நலனை முன்னிறுத்தியே செயற்படமுடியும் என்பதுவே யதார்த்தமாகும்.

அதற்கப்பால், தமிழ் சமூகத்தின்பால் பற்றுதலுடன் கூடிய உறுதியுடன் செயற்படக்கூடிய காத்திரமான உறவுநிலை, புலம்பெயர்ந்தோரின் வாரிசுகளுடன் வளர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றதா என்னும் கேள்வி வானுயர்ந்து தெரிகிறது.
விதையொன்று முளையாகி, செடியாகி, மரமாகும் வரை வாளாவிருந்துவிட்டு, காய்த்துக் குலுங்கும்போது “சொந்தம்” கொண்டாடுவதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?
ஆக, புலம்பெயர்ந்தோரின் வாரிசுகளிடமிருந்து தாயகம் எதனையும் எதிர்பார்க்கமுடியாது என்பதே கசப்பான உண்மையாகும்.
![]()