இலங்கை

செம்மணியின் ஆதாரங்கள் உடனடியாக ஐ.நா.விடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; அநுர அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை -தமிழ்த் தேசியப் பேரவை

இலங்கையில் நடந்த போர் தொடர்பில் நடைபெற்ற எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் ஒரு ராணுவ சிப்பாய் கூட நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தப்பட மாட்டார்கள்” என்று உறுதிப்படக் கூறியுள்ள தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது. எனவே தமிழ் மக்களுக்கு நடந்த பெரும் இனப்படுகொலைக்கு சாட்சியாகவுள்ள செம்மணியின் சாட்சியங்கள் ,ஆதாரங்கள் தற்போதைய அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு ஐ.நா.வினுடைய கட்டுப்பாட்டிலே வழங்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி. தமிழ் தேசியப்பேரவை ஆகியவற்றின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

செம்மணிமனிதப் புதைகுழி விசாரணையை ஐ. நா. சபை உடன் பொறுப்பேற்கக் கோரியும், இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் தமிழ்த்தேசியப் பேரவையும், பொது அமைப்புக்களும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நல்லூரில் மாபெரும் பேரணியை முன்னெடுத்த நிலையில் கிட்டு பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

போர் முடிந்து 17 வருடங்களுக்கு பின்னரும் சர்வதேச சமூகம் தமிழினத்திற்கு நடைபெறுகின்ற ஒரு இன அழிப்பு என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகின்றது. கனடா, பிரித்தானியா போன்று ஒரு சில நாடுகளுடைய முக்கியமான தலைவர்களைத் தவிர உத்தியோக பூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதற்கு தவிர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழலில்தான் இன்றைக்கு செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன . 96 ஆம் ஆண்டே இந்த உண்மைகள் வெளிவந்த போதும் கூட அதை மூடி மறைப்பதற்குத்தான் அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்தது. செம்மணியிலே 600 உடல்களுக்கு மேலதிகமான எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டும், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த செம்மணி பிரதேசம் எவருக்கும் பாவிக்க முடியாத வகையிலே, செல்ல முடியாத வகையிலே தடுக்கப்பட்டு, இரவிரவாக அந்த இடங்கள் சுத்தமாக்கப்பட்டன .

அப்படிப்பட்ட ஒரு சூழலின் இறுதியில் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பொழுது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுக்கு பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது.முடக்கப்பட்டதுக்கு பின்னர் ஒவ்வொரு வருஷமும் எங்களுடைய மக்கள் செம்மணிக்காக நீதியைக் கேட்டிருந்தும் கூட எவருமே செம்மணியைப் பற்றி பேசுவதற்கு தயாராக இருக்கவில்லை.

மாபெரும் இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு நடைபெற்றதுக்கு பின்னர் 16 வருஷத்துக்கு பின்னர் செம்மணியிலே இருக்கக்கூடிய அந்த சுடலையிலே கட்டுமான வேலைகள் நடைபெறுகின்ற பொழுது, எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன .ஆகவே, 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியிலே இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடந்தது ஒரு இனப்படுகொலை, என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் உலகத்துக்கு சொல்லியும், அது வெறுமனே எங்களுடைய கற்பனை, அது இனப்படுகொலை அல்ல, இனப்படுகொலைக்கு சாட்சியமில்லை என்று நம்மவர்களிலேயே ஒரு சிலர் சொல்லிக் கொண்டிருந்த ஒரு சூழலிலே, இல்லை இது இனப்படுகொலைதான், இது வெறுமனே போர்க்காலத்திலே போர் இறுதிகட்டத்திலே மட்டும் நடந்த இனப்படுகொலை அல்ல, காலம் காலமாக அரசுகள் அரசாங்கங்கள் மாறி மாறி தமிழினத்தை இனப்படுகொலை செய்தன என்பதனை நிரூபிப்பதற்கு கிடைத்த ஒரு மிக மிகப்பெரிய சாட்சியம்தான் செம்மணி.

1996 ஆம் ஆண்டிலே இருந்து 2026 ஆம் ஆண்டு வரைக்கும் நாங்கள் செம்மணிக்கு நீதியைக் கேட்டோம். அதை மறைப்பதற்கு மாறிமாறி வந்த ஒவ்வொரு அரசாங்கமும் செயல்பட்டு இருக்கின்ற ஒரு சூழலிலே, தவிர்க்க முடியாமல் இன்றைக்கு இந்த உண்மைகள் வெளிவந்திருக்கிறது. இந்த போரை நடத்துவதற்கு 2009 வரைக்கும் அன்றைக்கு ஆட்சியிலே இருந்த அரசாங்கங்களை ஆதரித்தும், இந்த போருக்கு நிபந்தனையில்லாத ஆதரவைக் கொடுத்தும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அன்றைய அரசாங்கத்துக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை சமாதானத்தை அடைவதற்கு செய்திருந்த பொழுது அது கிழித்தெறியப்பட வேண்டும், விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும், போரை நடத்த வேண்டும் என்று மிகவும் அழுத்தமாக அன்றைக்கு இருந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்த ஜே.வி.பி. தான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கின்றது.

அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க பல இடங்களிலே , “ஒரு ராணுவ சிப்பாய் கூட நீதிமன்றத்துக்கு முன்னால் இந்த போர் காரணத்தினாலே நடைபெற்ற எந்தவொரு சம்பவம் தொடர்பாகவும் நிறுத்தப்பட மாட்டார்கள்” என்றுசொல்லி இருக்கிறார். அப்படிப்பட்டு உத்தியோக பூர்வமாக சொல்லி இருக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கு கீழேதான் இன்றைக்கு இந்த செம்மணி இனப்படுகொலைக்கான ஆதாரமாக நிற்கின்றது

இன்றைக்கு நீதித்துறையிலே அரசாங்கம் முழுமையாக தலையிட்டு அதை அரசியல் மயப்படுத்துகின்றது என்று. சிங்கள மக்களே குற்றச்சாட்டை முன்வைக்கின்ற பட்சத்திலே, அத்தோடு 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைக்கான ஆணையாளர் இளவரசர் செயித் தன்னுடைய இறுதி அறிக்கையிலே, இலங்கையிலே நடைபெற்ற குற்றங்களை விசாரிப்பதாக இருந்தால் அது ஒரு நம்பகத்தன்மையான ஒரு விசாரணையாக இருக்க வேண்டுமாக இருந்தால், அது ஒரு உள்ளக விசாரணையாக இருக்க முடியாது என்று சொல்லி இருக்கின்ற ஒரு சூழலிலே இன்றைக்கு செம்மணி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

ஆகவே ஒரு அரசாங்கத்தின் ஜனாதிபதி , செம்மணி போன்ற படுகொலைகளுக்கும் இனப்பிரச்சினை சம்பந்தமாக நடந்த எந்தவொரு குற்றத்துக்கும் எந்தவொரு நபரையும் நீதிமன்றத்துக்கு முன்னால் தான் நிறுத்த மாட்டேன் என்று பகிரங்கமாக சொல்லியிருக்கின்ற ஒரு சூழலிலேயும், இந்த நாட்டோடு சம்பந்தப்படாத மனித உரிமைகள் சார்ந்த நிபுணத்துவம் பெற்ற மிகவும் உயர்மட்ட அதிகாரியாக இருக்கக்கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளரே ஒரு உள்ளக விசாரணை எந்த அளவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கொடுக்காது, மாறாக அது ஒரு பக்கசார்பாகத்தான் நடக்கும் என்று சொல்லியிருக்கின்ற சூழலிலே, இன்றைக்கு தமிழின படுகொலைக்கு கண்ணுக்கு முன்னாலே நாங்கள் எங்கள் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியிலே கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்திலே, அந்த படுகொலையை செய்த தரப்பு அதை விசாரிப்பதற்கு நாங்கள் தொடர்ந்து அனுமதித்தால் இந்த இனப்படுகொலையை நிரூபிக்கக்கூடிய இன்றைக்கு இருக்கக்கூடிய மிகச்சிறந்த ஆதாரங்களையும் நாங்கள் இழப்பதற்கு சமமாக இருக்கும்.

ஆகவேதான் இன்றைக்கு ஐ.நா.விலே அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழலிலே, எங்களுடைய உறவுகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஜெனீவாவிலே இங்கு நடைபெற்ற இந்த மாபெரும் எழுச்சி பேரணியை போன்று ஜெனீவாவிலும் நடத்தவிருக்கின்ற ஒரு சூழலிலே, நாங்கள் இந்த தாயகத்திலே இந்த மண்ணிலே வாழ்கின்ற பாதிக்கப்பட்ட மக்கள் இந்த நிலைப்பாட்டோடு மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.

ஒரு அரசு நடத்துகின்ற விசாரணைகள் எதிலும் நாங்கள் நம்பிக்கை வைத்துக்கொள்ளவில்லை. மாறாக இந்த அரசினுடைய கட்டுப்பாட்டிலே நீங்கள் கொடுக்கின்ற சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்படுவதற்குத்தான் சமம். அவர்களுடைய கட்டுப்பாட்டிலே இருக்கக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் அந்த சாட்சியங்கள் அழிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகரித்துக் கொண்டு வருகின்றது என்ற செய்தியை வெளிக்கொண்டு வருவதற்கு நாங்கள் அனைவரும் இன்றைக்கு ஒன்றுகூடி இருக்கின்றோம்.

ஆகவே இந்த பேரணியினுடைய, முதன்மையான கோரிக்கை,ஒரு இனப்படுகொலை தமிழினத்திற்கு நடைபெற்றிருக்கின்ற இடத்திலே, அந்த இனப்படுகொலை இலங்கை அரசினால் எங்கள் மீது செய்யப்பட்டிருக்கின்ற ஒரு சூழலிலே, ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை மட்டும்தான் எங்களுடைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசத்துக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கும் என்ற செய்தியையும், அத்தோடு இன்றைக்கு அந்த இனப்படுகொலைக்கு மிகவும் சிறந்த ஆதாரமாகவும், அது வெறுமனே ஒரு அரசாங்கம் மட்டும் செய்யவில்லை, இந்த உலகம் ஒரு லிபரல்வாதி ஒரு முற்போக்குவாதியாக தேர்ந்தெடுத்த, சந்திரிக்கா அம்மையாருடைய காலத்திலே கூட இந்த அளவுக்கு மோசமாக இந்த இனம் அழிக்கப்பட்ட அந்த சாட்சியம் செம்மணியிலே வெளிவந்திருக்கின்ற இந்த சூழலிலே, இந்த சாட்சியங்களை பாதுகாத்து ஒரு சர்வதேச விசாரணை ஊடாக இந்த சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்க வேண்டும், இது அரசினுடைய கட்டுப்பாட்டில் இருந்து உடனடியாக வெளியே எடுக்கப்பட்டு ஐ.நா.வினுடைய கட்டுப்பாட்டிலே வழங்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்துவதற்கு நாங்கள் இந்த பேரணியை இன்றைக்கு செய்திருக்கின்றோம்.

தமிழ் இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு இன்னுமொரு மிக முக்கியமான காரணம் இருக்கின்றது. இனப்படுகொலை என்றால் அதுவும் தமிழ் இனத்திற்கு இலங்கை தீவிலே இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறதாக இருந்தால், அது இலங்கை அரசினால் தான் செய்யப்பட்டது. இலங்கை அரசு உலகத்திலே இருக்கக்கூடிய ஏனைய அரசுகளைப் போன்று தன்னுடைய அதிகார எல்லைக்குள் இருக்கக்கூடிய மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களிடம் தான் இருக்கின்றது. ஆனால் அவர்களே இந்த இனத்தை தொடர்ச்சியாக 75 வருஷங்களுக்கு மேலாக கட்டமைப்பு சார்ந்த ரீதியாகவும் நேரடியாகவும் அழித்துக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி நிரூபிக்கப்படுவது தமிழ் இனத்துடைய, தமிழ் தேசத்துடைய அரசியல் நிலைப்பாடு, அதாவது நாங்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள். நாங்கள் எங்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே நாங்கள் எங்களை ஆளக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதின் ஊடாக மட்டும்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்ற கோரிக்கையையும் வெளிப்படுத்தும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *